search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல்- அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
    X

    சென்னையில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல்- அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

    சென்னை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பரிசோதனை செய்ததில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #DengueFever
    சென்னை:

    தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதிப்பட்டுள்ளது. அவர்களை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ரிஸ்வான் காய்ச்சலால் உயிரிழந்தான்.

    இந்த நிலையில் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 62 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதில் பரிசோதனை செய்ததில் 16 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் 20 முதல் 40 வயது உடையவர்கள் ஆவார்கள்.

    அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-


    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகம் இருந்தது. இந்த ஆண்டு அரசு எடுத்த தொடர் நடவடிக்கை காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஒருசில நாட்களில் காய்ச்சலால் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

    சென்னையில் இதுவரை 62 பேர் அனுமதிக்கப்பட்டதில் 16 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. டெங்கு காய்ச்சல் கொஞ்சம் அதிகமாகி உள்ளது. அதை அரசு மறைக்கவில்லை.

    காய்ச்சலை கண்டு மக்கள் பயப்பட வேண்டாம். யாராக இருந்தாலும் காய்ச்சல் வந்த 3-வது நாளில் ரத்த பரிசோதனை செய்ய வேண்டும். 5-வது நாளில் டெங்கு பரிசோதனை செய்து செய்து கொள்ள வேண்டும்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சலை குணப்படுத்த 20 லட்சம் டேமி புளூ மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளது.

    டெங்கு அறிகுறிகளுடன் உள்ள நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 100 சதவீதம் எந்தவித உயிரிழப்பும் இல்லாமல் அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

    சிறப்பு டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து நோயாளிகளை கண்காணித்து சிகிச்சை அளிக்கின்றனர்.

    பாளையங்கோட்டையில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் வந்ததும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தோம்.

    சென்னை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 50 படுக்கை கொண்ட ஆண்கள் வார்டும், 30 படுக்கைகள் கொண்ட பெண்கள் வார்டும் 1 மாதத்துக்கு முன்பே உருவாக்கப்பட்டு பிரத்யேக டாக்டர்கள் அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் ஜெயந்தி கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு பருவ மழை தொடங்குவதற்கு முன்பே காய்ச்சல் பாதிப்புடன் வந்துள்ளனர்.

    டெங்குக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆண், பெண்களுக்கு தனித்தனி வார்டுகள் தயாராக உள்ளது. போதுமான மருந்துகளும் உள்ளன. டெங்கு பாதிப்பை தடுக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    பெற்றோர் தங்களது குழந்தைகளை கொசுக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும். அவர்களுக்கு மழை காலத்தில் உடல் முழுவதும் மறைக்கும்படி ஆடை அணிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சாலையோரத்தில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள பொருட்களான தேங்காய் மட்டை, டயர் போன்றவற்றை அகற்றி வருகிறார்கள்.

    இதே போல் ஒவ்வொரு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி கூறும்போது, “மாநிலம் முழுவதும் டெங்கு பாதிப்பை தடுக்க 21 ஆயிரம் ஊழியர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு உள்ளது.

    அதை கட்டுப்பாட்டில் வைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தெருவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வீடு வீடாக சென்று தேவையற்ற பொருட்களை அகற்றி வருகிறார்கள். கடந்த 2017-ம் ஆண்டு 22 ஆயிரம் பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து இதுவரை 2,200 பேர் மட்டுமே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தீவிர நடவடிக்கையால் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்துப்பட்டு இருப்பதற்கு இதுவே உதாரணம்” என்றார். #DengueFever
    Next Story
    ×