search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்
    X

    சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள்

    சீரான குடிநீர் வழங்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி ஈச்சம்பட்டியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    கல்குறிச்சி ஈச்சம்பட்டியில் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க உதவும் மின்மோட்டார்கள் பழுதாகி விட்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. காவிரி குடிநீரும் வாரத்திற்கு ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கு அறிவுறுத்தி, பழுதான மின்மோட்டார்களை சரிசெய்து சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல் கந்தம்பாளையம் அருகே உள்ள வானக்காரன்பாளையம் ராமதேவம் கிராமத்தை சேர்ந்த பெண்களும் நேற்று காலிக்குடங்களுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது :-

    ராமதேவம் கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் மின்மோட்டார் பழுதாகி விட்டதால் கடந்த 2 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. காவிரி குடிநீரும் வாரம் ஒருமுறை மிக குறைவான அளவே வருகிறது. இதனால் குடிநீர் இன்றி கடும் அவதி அடைந்து வருகிறோம். எனவே பழுதான மின்மோட்டாரை சரிசெய்து, சீரான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    சீரான குடிநீர் வழங்கக்கோரி இரு கிராமங்களை சேர்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
    Next Story
    ×