search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரூ. 3 கோடி மோசடி புகார் கூறியதால் கூட்டுறவு சங்க பெண் ஊழியர் தற்கொலை
    X

    கோவையில் ரூ. 3 கோடி மோசடி புகார் கூறியதால் கூட்டுறவு சங்க பெண் ஊழியர் தற்கொலை

    கோவையில் கூட்டுறவு சங்க அலுவலகத்தில் பணிபுரிந்த வந்த பெண் மோசடி குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார்.
    காரமடை:

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மொங்கம் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பரமேஷ். இவருடைய மனைவி சுமதி (39).

    இவர் பெள்ளாதி கூட்டுறவு கடன் வசதி சங்கத்தில் அலுவலக ஊழியராக வேலை பார்த்து வந்தார். சுமதி கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காரமடை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சக்தி வேல், சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து சுமதி பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது மோசடி புகார் கூறியதால் சுமதி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சுமதி வேலை பார்த்த கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக மனோகரன் வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 3 மாதத்துக்கு முன்பு கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 3 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகை மோசடி நடைபெற்றதாக உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனை தொடர்ந்து செயலாளர் மனோகரன் தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மனோகரன் கூட்டுறவு சங்கத்திற்கு வந்துள்ளார். அப்போது சங்க உறுப்பினர்கள் அவரை முற்றுகையிட்டு உள்ளனர். அவர்களிடம் கூட்டுறவு கடன் சங்கத்தில் வேலை பார்க்கும் சுமதியும் மோசடி செய்துள்ளார் என கூறிவிட்டு மனோகரன் அங்கிருந்து சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து பெள்ளாதி கிராமத்தை சேர்ந்த நசீர், சண்முகம், முகேஷ் வெங்கட், தொட்டி பாளையம் ராஜேந்திரன், ஆண்டவன் முருகேஷ், கனகராஜ் ஆகிய 6 பேர் சுமதியை தகாத வார்த்தைகளால் திட்டியதும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    இதையடுத்து கூட்டுறவு சங்க செயலாளர் மனோகரன் உள்பட 7 பேர்மீது சுமதியை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×