search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கச்சா எண்ணை விலை அதிகரிப்பு: பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயரும் அபாயம்
    X

    கச்சா எண்ணை விலை அதிகரிப்பு: பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயரும் அபாயம்

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை இறக்கைக் கட்டி பறப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. #FuelPrice #PetrolDiesel #PetrolPriceHike
    சென்னை:

    பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 மாதங்களாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு ஆகிய இரு காரணங்கள்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இவற்றோடு மத்திய - மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் பெட்ரோல் டீசல் விலையை உச்சத்தில் வைத்துள்ளன.

    இந்தியாவின் பெட்ரோல், டீசல் தேவையில் 83 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கு வளைகுடா நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணை தான் கைகொடுப்பதாக உள்ளது. இந்த கச்சா எண்ணையில் பெரும்பகுதியை ஈரான் நாடு நமக்கு வழங்கி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் கச்சா எண்ணை வி‌ஷயத்தில் மோதல் ஏற்பட்டது.

    இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அதோடு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்காதீர்கள் என்று இந்தியா உள்பட பல நாடுகளை அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தபடி உள்ளது. இந்த விவகாரம் தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரிப்புக்கு வழி வகுத்து விட்டது.

    அமெரிக்காவின் நெருக்கடி காரணமாக ஈரான் நாடு, தனது கச்சா எண்ணை உற்பத்தியை கணிசமாக குறைத்து விட்டது. இதனால் ஈரானில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் கச்சா எண்ணை அளவு 12 சதவீதம் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து கச்சா எண்ணையை உற்பத்தி செய்யும் மற்ற நாடுகளிடம் உற்பத்தி அளவை அதிகரிக்கும்படி அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.

    ஆனால் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை எண்ணை தயாரிக்கும் எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை தினமும் தொடர்ந்து உயர்ந்தபடி உள்ளது. நேற்று சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 80 டாலரை கடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 81 டாலரைக் கடந்தது. இந்த நிலையில் ரஷியா தலைமையிலான கச்சா எண்ணை ஏற்றுமதி நாடுகள் தங்களது கச்சா எண்ணை உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளன. இதன் காரணமாக வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 90 டாலராகவும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 100 டாலரையும் எட்டும் என்று யூகங்கள் நிலவுகின்றன.

    இத்தகைய சூழ்நிலையில் அடுத்த சில மாதங்களில் கச்சா எண்ணை விலை குறைய வாய்ப்பு இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து சரிந்தபடி உள்ளது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.64 ஆக இருந்தது.


    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை இறக்கைக் கட்டி பறப்பதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.99க்கு விற்பனையானது. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 14 காசுகள் அதி கரித்துள்ளது.

    இதனால் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 13 காசாக உயர்ந்துள்ளது. அதுபோல இன்று டீசல் விலை 10 காசுகள் அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.78.36 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் வரியில் வாட் வரிக்கு ஏற்ப விலையில் ஏற்றத்தாழ்வு உள்ளது.

    தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது 32.16 சதவீதமும், டீசல் மீது 24.08 சதவீதமும் வாட் வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மும்பையில்தான் அதிகபட்சமாக பெட்ரோலுக்கு 39.12 சதவீதமும், டீசலுக்கு 38.11 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. இதனால் மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை தாண்டி விட்டது.

    தமிழ்நாட்டிலும் அடுத்த வாரம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்து விடும் என்று தெரிகிறது. கடந்த 9 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 14 ரூபாயும், டீசல் 15 ரூபாயும் அதிகரித்துள்ளது.

    கச்சா எண்ணை விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல், டீசல் விலை வரும் நாட்களில் தொடர்ந்து அதிகரிக்க உள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகளை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக லாரி உரிமையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.30 ஆயிரம் வரை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் லாரி சரக்கு கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் சுமார் 4 லட்சம் லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் தினமும் பருப்பு வகைகள், தண்ணீர், சிமெண்ட், அரிசி மற்றும் இரும்புப் பொருட்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்கின்றன.

    லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் லாரிகளில் எடுத்துச் செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலை தானாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சரக்கு புக்கிங் கட்டண உயர்வு நேற்றே உடனே அமலுக்கு வந்து விட்டது.

    எனவே விரைவில் அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகளின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளன.

    பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.  #FuelPrice #PetrolDiesel #PetrolPriceHike

    Next Story
    ×