search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீர் திறப்பு அதிகரிக்காததால் பூண்டி ஏரியை அடைய தாமதமாகும் கிருஷ்ணா தண்ணீர்
    X

    நீர் திறப்பு அதிகரிக்காததால் பூண்டி ஏரியை அடைய தாமதமாகும் கிருஷ்ணா தண்ணீர்

    கோடை வெயில் காரணமாக கால்வாய் வறண்டு உள்ளதாலும், தண்ணீரின் வேகம் குறைந்து இருப்பதாலும் கிருஷ்ணா தண்ணீர் பூண்டி ஏரியை அடைய தாமதமாகிறது. #Krishnawater
    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது.

    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீரை தேக்கி வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    தற்போது பூண்டி ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டதால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்புவது கடந்த 3 மாதத்துக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டது.

    இதேபோல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இதையடுத்து குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஆந்திர அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதிநீர் பிடிப்புகளில் பெய்த பலத்த மழையால் ஸ்ரீசைலம் அணை முழுவதும் நிரம்பியது. அங்கிருந்து சோமசிலா அணைக்கு நீர் திறக்கப்பட்டது. அதுவும் நிரம்பியதால் கண்டலேறு அணைக்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நேற்று முன்தினம் காலை கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. முதலில் 300 கன அடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என்று கூறப்பட்டது.

    ஆனால் தொடர்ந்து 2 நாட்களாக 300 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் தண்ணீர் பாய்ந்து வரும் வேகம் குறைந்துள்ளது.

    கண்டலேறு அணை - பூண்டி ஏரி இடையே 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்ணீர் வர கால்வாய் உள்ளது. கோடை வெயில் காரணமாக கால்வாய் வறண்டு உள்ளதாலும், தண்ணீரின் வேகம் குறைந்து இருப்பதாலும் இன்று காலை வரை 22 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே கிருஷ்ணா நீர் வந்துள்ளது.

    ஒரு நாளைக்கு 25 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கிருஷ்ணா நீர் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2 நாட்களில் 22 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே தண்ணீர் அடைந்து இருப்பதால் பூண்டி ஏரியை சென்றடைய மேலும் கூடுதல் நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Krishnawater

    Next Story
    ×