search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்-டீசல்: ஏன் இந்த விலை உயர்வு?
    X

    பெட்ரோல்-டீசல்: ஏன் இந்த விலை உயர்வு?

    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தற்காலிகமாக சற்று குறைத்து அவற்றின் விலைகள் குறையுமாறு செய்ய வேண்டும். அதே போல, மாநில அரசும் வாட் வரியை சற்றேனும் குறைக்க வேண்டும். #PetrolDiesel #PetrolDieselPriceHike
    பெட்ரோல், டீசல் விலை தினமும் எகிறிக்கொண்டு இருக்கிறது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.41, டீசல் விலை ரூ.78.10 க்கும் விற்பனையாகிறது. 6 மாதத்தில் கிட்டத்தட்ட லிட்டருக்கு 10 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

    எதனால் இந்த கடுமையான விலை உயர்வு? இதைக் குறைக்க முடியாதா? முடியும் என்றால் யார் செய்யவேண்டும்? என்ற கேள்விகளுக்கு விடை காண வேண்டும் அல்லவா!

    பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றுக்கு அடிப்படையான, பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய், நம் நாட்டில் கிடைக்கும் அளவு குறைவுதான். வளைகுடா போன்ற எண்ணெய் வள நாடுகளில்தான் அதிகம் கிடைக்கிறது. தவிர, அமெரிக்கா, ரஷியா போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.

    நம் நாட்டில் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அளவு, தேவையை விட மூன்று மடங்கு குறைவாக இருக்கிறது. இதற்கு மக்கள் தொகையும், அதிகரிக்கும் வாகன பெருக்கமும் முக்கிய காரணம்.

    ஆண்டுதோறும் புதிதாக சாலை பயன்பாட்டுக்கு வரும் கார்களின் எண்ணிக்கை மட்டும் 30 லட்சம் ஆகும். இருசக்கர மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை 2 கோடி. ஏற்கனவே இருப்பவை பல கோடி. இதுபோக, விமானங்கள், பஸ்கள், லாரிகள், டீசலில் ஓடும் ரெயில்கள் மற்றும் பிற வாகனங்கள், மோட்டார்கள், ஜெனரேட்டர்கள் போன்றவற்றுக்கான பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நம் பற்றாக்குறையை நிறைவு செய்ய வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை நீடிக்கிறது.

    2017-18-ம் ஆண்டில் நம் நாடு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது 220 மில்லியன் டன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்). ரூபாய் மதிப்பில் 5.75 லட்சம் கோடி ரூபாய் ஆகும். நடப்பாண்டு முழுவதுக்கும் இறக்குமதி செய்ய திட்டமிட்டிருப்பது 227 மில்லியன் டன்.

    உலகில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் சில தான். ஆனால், இறக்குமதி செய்துகொள்ளும் நாடுகள் பல. உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தேவைகளைப் பொருத்தும், கச்சா எண்ணெய் உற்பத்தியைப் பொருத்தும் அதன் விலை வெவ்வேறு சமயங்களில் ஏற்றம்-இறக்கம் காண்கிறது.

    செப்டம்பர் மாதம், கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 டாலர். 6 மாதங்களுக்கு முன்பு 72 டாலராக இருந்தது. இந்த இடைவெளியில் 8 சதவீதம் விலை ஏறி இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை உயர்வு, நம் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான காரணங்களில் ஒன்று.

    மற்றொரு காரணம், கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு டாலரில் பணம் கொடுக்கவேண்டும். அந்த அமெரிக்க டாலர் மதிப்பு சமீபத்தில் உயர்ந்துவிட்டது. ஏப்ரல் மாதம் ஒரு டாலர் மதிப்பு 64 ரூபாயாக இருந்தது. அதுவே இப்போது 71.85 ரூபாய் ஆகிவிட்டது.

    இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலர் மதிப்பு உயர சர்வதேச காரணங்கள் பல இருந்தாலும், இந்தியா சார்ந்த ஒரு காரணமும் உண்டு. அது, இந்தியா ஏற்றுமதியை விட இறக்குமதியைதான் அதிகம் செய்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் முக்கிய பொருள் கச்சா எண்ணெய்தான்.

    2017-18 ஆண்டில் இந்தியா செய்த மொத்த ஏற்றுமதி அளவு 302 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால், இறக்குமதியோ 459 பில்லியன் டாலர்கள். ஆக, நமக்கு டாலர் பற்றாக்குறை. இன்னொரு புறம் டாலர் மதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இதை அரசும் ஒப்புக்கொண்டு உள்ளது.

    இது உண்மைதான் என்றாலும், விலை உயர்வுக்கு இவை போக மற்றொரு காரணம் உண்டு. அது, பெட்ரோல்-டீசல் மீது, மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்.

    ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயில் இருந்து 159 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் எடுக்கலாம். அந்த கணக்கில் பார்த்தால், சமீபத்திய கச்சா எண்ணெய் விலையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஆகும் கச்சா எண்ணெயின் அடக்கவிலை சுமார் 36 ரூபாய்.

    வெளிநாட்டில் இருந்து நம் நாட்டுக்கு கப்பல்களில் கொண்டு வந்து, சுத்திகரிப்பு செய்ய வேண்டும். அதன்பின், டேங்கர்களில் ஏற்றி, பெட்ரோல் பம்புகளுக்கு கொண்டுவரவேண்டும், இதற்கெல்லாம் சேர்த்து லிட்டர் ஒன்றுக்கு சுமார் ரூ.3.50 ஆகிவிடும்.

    இதன் மீது மத்திய அரசு லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48 கலால் மற்றும் ‘ரோட் செஸ்’ வரி போடுகிறது (டீசல் மீது லிட்டருக்கு ரூ.15.33). வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு இடங்களில் ஆட்கள் போட்டு, பெட்ரோல் வினியோகம் செய்யும் டீலர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.63 கமிஷன் அல்லது கட்டணம். (டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.2.53 கொடுக்கப்படுகிறது). இவற்றை எல்லாம் சேர்த்தால், மேற்கண்ட கச்சா எண்ணெய் விலைப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ.62.50-ம், ஒரு லிட்டர் டீசல் சுமார் ரூ.61-ம் ஆகும்.

    இதற்கு மேல் மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு வரி எனப்படும் வாட் வரியை விதிக்கின்றன. அதை லிட்டருக்கு இவ்வளவு ரூபாய் என்று போடாமல், விலையில் இத்தனை சதவீதம் என்ற கணக்கில் மாநில அரசுகள் போடுகின்றன.



    ஜி.எஸ்.டி.-க்குள் பெட்ரோல், டீசல் விலைகள் கொண்டுவரப்படாததால், கலால் வரி போல, நாடு முழுமைக்கும் வாட் வரி ஒரே அளவு இல்லை. இதை மாநில அரசே முடிவு செய்துகொள்ளும்.

    தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது 32.11 சதவீதமும், டீசல் மீது 24.04 சதவீதமும் வாட் வரி விதிக்கப்படுகிறது. பெட்ரோல் மீதான வாட் வரி, நாட்டிலேயே மராட்டிய மாநிலத்தில் அதிகபட்சமாக 39 சதவீதமும், குறைவாக அந்தமானில் வெறும் 6 சதவீதமும் விதிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டில் பெட்ரோல் மீது விதிக்கப்படும் 32.11 சதவீத வாட் வரி என்பது சுமார் 20 ரூபாய் ஆகும். அதாவது பெட்ரோலுக்கு வரிகள் மட்டுமே ரூ.40-க்கும் மேல் ஆகும்.

    இது மக்களை வெகுவாக பாதிக்கிறது. எனவே, மக்களின் சிரமத்தைப் போக்க அரசு அவசரமாக சில நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

    கச்சா எண்ணெய் விலை அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லைதான். எனவே அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. அதேபோல, டாலர் மதிப்பு ஏற்றத்தையும் மத்திய அரசால் ஓரளவே கட்டுப்படுத்த இயலும்.

    ஆனாலும், தொடர்ந்து ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலம் நடப்புக்கணக்கு பற்றாக்குறையை கணிசமாகக் குறைத்து, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைக் கூட்டலாம். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை தற்காலிகமாக சற்று குறைத்து, அவற்றின் விலைகள் குறையுமாறு செய்யவேண்டும்.

    அதே போல, மாநில அரசும் வாட் வரியை சற்றேனும் குறைக்க வேண்டும். வாட் வரியை இத்தனை சதவீதம் என நிர்ணயிக்காமல் இத்தனை ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும். அது 20 ரூபாயுக்கும் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு விலைவாசியையும், அதன் மூலம் பணவீக்கத்தையும், அதன் மூலம் பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்க வல்லவை. இதனால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளே.

    டாக்டர் சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர்
    Next Story
    ×