search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு
    X

    சேலத்தில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு

    சேலத்தில் ஏ.டி.எம்.களில் பணம் இல்லாததால், அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகினர்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிககள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளின் கீழ் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏ.டி.எம்.கள் பயன்பாட்டில் உள்ளன.

    பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் ஏ.டி.எம். மற்றும் டெப்பாசிட் எந்திரங்கள் செயல்பாட்டிற்கு வந்ததால் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பணம் எடுப்பது முற்றிலும் குறைந்தது. தேவையான நேரங்களில் தேவைக்கு தகுந்தவாறு ஏ.டி.எம்.களில் பணத்தை எடுத்து வந்தனர்.

    ஆனால் கடந்த சில மாதங்களாக சேலம் மாநகரில் உள்ள பெரும்பாலான ஏ.டி.ம்.களில் பணம் இருப்பதில்லை. இதனால் பணத்தை தேடி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஏ.டி.எம். அலையும் நிலை இருந்து வருகிறது.

    மேலும் பணம் டெப்பாசிட் செய்யும் எந்திரங்களும் பெரும்பலானான நாட்களில் அவுட் ஆப் சர்வீஸ் என்றே காட்டுகிறது. வங்கிகளுக்கு சென்று பணத்தை டெப்பாசிட் செய்ய சென்றால் மிஷினில் பணத்தை டெப்பாசிட் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள்.

    ஆனால் மிஷின் பழுதால் அவசர தேவைக்கு கூட பணத்தை செலுத்த முடியாமல் பொதுமக்கள் திணறுகிறார்கள். இது குறித்து சம்பந்தபட்ட வங்கியில் சொன்னாலும் முறையான பதில் இல்லை.

    இதற்கிடையே நேற்று முதல் சேலம் மாநகரில் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம்.களில் பணம் இல்லை.இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு ஏ.டி.எம்.களாக ஏறி இறங்கினர். இன்று காலையும் கண்ணில்பட்ட எந்த ஏ.டி.எம்.களிலும் பணம் இல்லை. இதனால் அவசர தேவைக்கு கூட பணம் எடுக்க முடியாமல் பொது மக்கள் தவிப்புக்குள்ளாகினர்.

    இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற பொது மக்கள் பணம் இல்லாத இந்த ஏ.டி.எம். சென்டர்களை மூட வேண்டியது தானே. பணம் இல்லாத ஏ.டி.எம்.களுக்கு காவலாளி ஒரு கேடா? என்று புலம்பியபடியே சென்றனர்.

    இது குறித்து வங்கி ஊழியர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

    ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கும் ஒப்பந்தம் தனியாரிடம் விடப்பட்டுள்ளது. அவர்கள் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை தான் வந்து பணம் வைப்பார்கள். ஏ.டி.எம்.கள் காலியானது தொடர்பாக வங்கியில் இருந்து அழைத்தாலும் அவர்கள் வருவதில்லை. மேலும் பெரும்பாலான வங்கிகளில் அனைத்து புதிய ரூபாய் நோட்டுகளுக்கு ஏற்றவாறு எந்திரங்கள் மாற்றி அமைக்கப்பட வில்லை. ஏ.டி.எம். எந்திரங்கள் குறைந்த அளவு பணம் வைக்கும் வகையில் உள்ளது.

    பழைய எந்திரங்களாக இருப்பதால் அந்த எந்திரங்கள் அடிக்கடி பழுதாகிறது.பழைய எந்திரங்களை மாற்றி விட்டு அதிக அளவில் பணம் வைக்கும் வகையில் நவீன எந்திரங்களை வைத்தால் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது-

    செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் வங்கிகள் இயங்காது என்று வதந்தி பரவியதால் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த பணத்தை பொதுமக்கள் வழக்கத்தை விட அதிக அளவில் எடுத்து சென்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதாலும் பெரும்பாலான ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் வைக்கவில்லை.

    இதனால் ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்த பணம் முற்றிலும் காலியாகி விட்டது. இன்று காலை முதல் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பப்படும். அதன் பிறகு பொதுமக்கள் தேவைக்கு தகுந்தவாறு பணம் எடுத்து கொள்ளலாம் என்றார்.


    Next Story
    ×