search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழவேற்காடு, செங்குன்றத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கலப்பட மணல் பறிமுதல்
    X

    பழவேற்காடு, செங்குன்றத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கலப்பட மணல் பறிமுதல்

    பழவேற்காடு, செங்குன்றம் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள கலப்பட மணலை பொன்னேரி கோட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படும் சிலிக்கான் மணல் மற்றும் பழவேற்காடு முகத்துவார பகுதிகளில் இருந்து கடத்தப்படும் கடல் மணல்கள் ஆற்று மணலுடன் கலந்து விற்கப்படுவதாக புகார் எழுந்து உள்ளது.

    இந்த கலப்பட மணல்கள் செங்குன்றம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும் போலி மணல் தயாரிப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலை தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பழவேற்காடு அடுத்த காட்டுப்பள்ளி காலஞ்சி பகுதி மற்றும் செங்குன்றம் கிரான்லைன் பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 150 யூனிட் கலப்பட மணலை பொன்னேரி கோட்டாட்சியர் முத்துச்சாமி மற்றும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கலப்பட மணல் தயாரிக்கும் கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். செங்குன்றம் பகுதியில் மேலும் பல குடோன்களில் கலப்பட மணல் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

    கலப்பட மணல் தொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் எஸ்.யுவராஜ் கூறியதாவது:-

    தமிழகத்தில் மணல் விற்பனை ஆன்லைன் மூலம் அரசே நேரடியாக குவாரியில் வழங்கி வரும் நிலையில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் வகையில் சிலர் கட்டுமான பணிக்கு தரமற்ற போலி மணலை அப்பாவி மக்களுக்கு வழங்கி வருவது குறித்து மாவட்ட காவல்துறை துணை ஆணையருக்கு நேரடியாக மனு கொடுத்தும் இதுநாள் வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    காவல் துறை உதவியுடன் கலப்பட மணல் சென்னை நகருக்கு கொண்டு வரப்படுகிறது. தரமற்ற இந்த மணலால் கட்டப்படும் கட்டிடங்கள் உறுதியற்றதாக இருக்கும். முகலிவாக்கம் பேரழிவு போன்ற நிலை மீண்டும் உருவாகி விடக்கூடாது.

    ஆதலால் செங்குன்றம் பகுதியில் நடைபெறும் கடத்தல் மற்றும் கலப்பட மணல் விற்பனையை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    Next Story
    ×