search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக மீனவர்களுக்கு கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்லமுடியுமா? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    தமிழக மீனவர்களுக்கு கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்லமுடியுமா? - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

    நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்ல முடியுமா? என்று மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #TNfishermen
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் மீனவர்கள் நல சங்கம் சார்பில் பீட்டர் ராயன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மீன்வளத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசுடன் பேசி அவ்வப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1991-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 168 துப்பாக்கி சூடு சம்பவங்களில் மொத்தம் 85 மீனவர்கள் பலியாகியுள்ளனர். 180 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.

    2011-ம் ஆண்டு முதல் தற்போது வரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 3,033 மீனவர்களும், 393 மீன்பிடி படகுகளும் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் 29 மீனவர்களும் 177 படகுகளும் இலங்கை அரசின் பிடியில் உள்ளது.

    தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்கவும் மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இந்திய கடலோர காவல் படை, இந்திய கடற்படை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இதனை படித்துப்பார்த்த நீதிபதிகள், ‘தமிழக மீனவர்கள் நடுக்கடலில் இந்திய எல்லையை துல்லியமாக கண்டறிவது கடினமான ஒன்றாகும். இலங்கை மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடிக்கத்தானே செய்கின்றனர்?’ என்று கேள்வி எழுப்பினர்.

    மேலும், ‘இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதமாக நடுக்கடலில் நாட்டிக்கல் மைலை அளவிடும் கருவியை தமிழக மீனவர்களின் படகுகளில் பொருத்தினால் என்ன? இது இந்திய எல்லையை மீனவர்கள் எளிதாக தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும். இந்த நடவடிக்கை மேற்கொள்ளும் வரை நடுக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செல்லமுடியுமா?’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதுகுறித்து மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 31-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். #TNfishermen

    Next Story
    ×