search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கும்பல் கைது
    X

    திருப்பூரில் பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் கும்பல் கைது

    திருப்பூரில் பங்களா வீட்டில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய 6 பேர் கும்பல் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் மனோகர் மற்றும் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் திருப்பூர் கே.வி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஓடைக்காடு என்ற இடத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 6 பேர் கும்பல் பதுங்கி இருந்தது. அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் அவர்களை நோக்கி சென்றனர். போலீசாரை பார்த்ததும் அக்கும்பல் ஓட்டம் பிடித்தது.

    போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அவர்களது பெயர் சண்முகம், வல்லரசு, கோகுல் ராஜ், வினித், வெற்றி செல்வன், சதிஷ்வரன் என்பது தெரிய வந்தது. இவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

    அவர்களிடம் விசாரித்த போது ஓடைக்காடு பகுதியில் ஒரு பங்களா வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர். அந்த பங்களா வீட்டில் 3 பேர் இருப்பதாகவும் அவர்களது வீட்டில் நேற்று இரவு கொள்ளையடிக்க திட்டம் தீட்டி இருந்ததாகவும், கொள்ளையை தடுத்தால் கொலை செய்யவும் தயாராக இருந்ததாகவும் கூறினர். கடந்த 2 நாட்களாக இந்த பங்களா வீட்டை நோட்டமிட்டதாகவும் தெரிவித்தனர்.

    இதற்காக மிளகாய் பொடி, அரிவாள், இரும்பு ராடு, உளி மற்றும் முகமூடி தயார் செய்து வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இந்த ஆயுதங்களை அப்பகுதியில் உள்ள முள் காட்டில் பதுங்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர்.

    அவர்களை முள் காட்டுக்கு அழைத்து சென்ற போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். சரியான நேரத்தில் கொள்ளை கும்பலை போலீசார் பிடித்ததால் கொள்ளை தடுக்கப்பட்டு உள்ளது. கைதான 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
    Next Story
    ×