search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பை தொட்டியில் பெண் குழந்தையை வீசிய பெண்ணிடம் விசாரணை
    X

    குப்பை தொட்டியில் பெண் குழந்தையை வீசிய பெண்ணிடம் விசாரணை

    நாகர்கோவில் அருகே குப்பை தொட்டியில் பெண் குழந்தை வீசிய பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரி, அறுகுவிளை அங்கன்வாடி மையம் பகுதியில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    இதை கேட்ட அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது குப்பை தொட்டியில் பிறந்த சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று சாக்குப்பையில் வைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குப்பை தொட்டியில் கிடந்த அந்த குழந்தையை பொதுமக்கள் மீட்டனர். பின்னர் வடசேரி போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் குழந்தைகள் நல அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பொதுமக்களிடம் இருந்த அந்த குழந்தையை மீட்டனர். குப்பை தொட்டியில் குழந்தையை வீசிச் சென்றது யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட குழந்தையை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.

    அங்கு குழந்தைகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    குப்பை தொட்டியில் குழந்தை கிடந்தது குறித்து அறுகுவிளை பட்டன்காம் பவுண்டு பகுதியை சேர்ந்த சித்ரா (வயது 42) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வடசேரி போலீசார் இந்திய தண்டனைச் சட்டம் 317 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை வீசிச் சென்ற பெண் குறித்த அடையாளங்களை சேகரித்தனர். பறக்கை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தற்போது அறுகுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதும், அவர்தான் இந்த குழந்தையை வீசிச் சென்று இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    அவருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளதும் தற்போது மீண்டும் 4-வது பெண் குழந்தை பிறந்ததால் வீசிச் சென்றிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அந்த பெண்ணை விசாரணை வளைத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே குப்பை தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை வளர்ப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. பல தம்பதிகள் குழந்தைகள் நல அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த குழந்தையை தங்களிடம் வளர்க்க தருமாறு கோரி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×