search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
    X

    திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தயார் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தெரிவித்தார். #Thiruparankundramconstituency
    சென்னை:

    இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள்(கலெக்டர்கள்) மாவட்ட துணைத் தேர்தல் அதிகாரிகளுக்கு வாக்குபதிவு எந்திரத்தையும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு எந்திரத்தையும் இயக்குவது குறித்த பயிற்சி கருத்தரங்கு சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

    கருத்தரங்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு தொடங்கி வைத்தார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் சவுமியா ஜித் கோஷ் கலந்து கொண்டார். தேசிய அளவிலான தலைமை பயிற்சியாளர் என்.டி.பர்மர் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தார். பெங்களூரு பாரத மின்னணு நிறுவன தொழில் நுட்ப வல்லுனர்கள் உடன் இருந்து தொழில் நுட்ப ரீதியிலான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட துணை தேர்தல் அதிகாரிகளும், வாக்குபதிவு எந்திரத்திற்கான ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் பயிற்சி கருத்தரங்கில் கலந்துகொண்டனர்.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாஹு நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து முழுவதும் சொல்லித் தரப்படும். இந்த கூட்டத்தை தொடர்ந்தும் அவர்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து பயிற்சியும் அளிக்கப்படும்.



    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து உள்ளோம் அங்கு இடைத்தேர்தல் நடத்த தயார் ஆக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்தவுடன் அந்த தேதியில் தேர்தல் நடத்துவோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்தான் பயன்படுத்தப்படும். இந்த எந்திரங்களில் தவறு எதுவும் நடக்காது.

    யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு எந்திரம் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பயன்படுத்தப்படும். தேர்தலுக்கு முன்பாக தமிழகத்தில் விடுபட்ட மற்றும் தகுதி உள்ள வாக்காளர்களை சேர்த்து புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.  #Thiruparankundramconstituency
    Next Story
    ×