search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிதி இருந்தும் சம்பளம் வழங்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர் - அன்பழகன்
    X

    நிதி இருந்தும் சம்பளம் வழங்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர் - அன்பழகன்

    நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
    புதுச்சேரி:

    நிதி மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை உருவாக்கி இருப்பதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.

    புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநில கவர்னர், முதல்-அமைச்சர் இடையிலான மோதல் அவர்கள் வகிக்கும் பதவிகளின் மாண்பை சீர்குலைத்து வருகிறது. சட்டமன்ற நிதி ஒதுக்க மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த பிறகும் அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்கு இந்த மாதம் சம்பளம் போடமுடியாத சூழ்நிலையை இருவரும் உருவாக்கியுள்ளனர்.

    அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ள உரிமைகளை தவறாக பயன்படுத்தி தங்களின் தான்தோன்றித்தனமான செயல்களால் மக்களிடத்தில் குழப்ப நிலையை உருவாக்கியுள்ளனர். சட்டமன்ற கூட்டத்தொடர் இதுவரை முடித்து வைக்கப்படவில்லை. சட்டமன்றத்தில் பல்வேறு துறைகளுக்கான நிதிகள் விவாதிக்கப்பட்டபோது கவர்னர் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. தற்போது நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தை முன்வைத்து நிதி மசோதாவிற்கு அனுமதி அளிப்பது என்பது நேர்மறையான செயலாகும்.

    கவர்னரின் செயலை பெரிதுபடுத்தாமல் சட்டமன்றத்தை மறுபடியும் கூட்டி இறுதி செய்திருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு தேவையில்லாத செயல்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் மன்னிக்க முடியாத குற்றவாளிகள். இருவருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் போக்கால் தேவையான நிதி இருந்தும் ஜுலை மாதம் சம்பளத்தை போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும். நிதிமசோதா தாமதத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    சட்டமன்றத்தை ஏன் கூட்டவில்லை? என்றும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து சபாநாயகர் வைத்திலிங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். நிதி ஒதுக்க மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்கும் போது பல்வேறு நிபந்தனைகளை கவர்னர் விதித்துள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இதற்க அனுமதி உள்ளதா? இது மிகப்பெரிய அத்துமீறல் ஆகும். கவர்னர் தன்னுடைய மாண்புகளை மறந்து அதிகார போதையில் செயல்பட்டு வருகிறார். புதுவை சட்டமன்ற வரலாற்றில் இந்த நிகழ்வு ஒரு கரும்புள்ளி.

    கவர்னர் கிரண்பேடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை மட்டுமே செய்து வருகிறார். 31-ந் தேதிக்குள் சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என கூறுவதற்கு கவர்னருக்கு அதிகாரம் இல்லை. கவர்னர் மீது தவறு இருந்தால் மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பபெற வேண்டும். இந்த அரசை 6 மாத காலத்திற்கு முடக்கம் செய்ய வேண்டும். இவ்வளவு பிரச்சினைகள் நடந்து வரும் வேலையில் எதிர்கட்சி தலைவரான ரங்கசாமி அமைதியாக இருப்பது சரியல்ல.

    முதுகெலும்பு உள்ள அரசாக இருந்தால் கவர்னர் மீது உரிமை மீறல் புகார் எழுப்பலாம். நாங்கள் அதை ஆதரிக்க தயார். மின் மீட்டர் புகார் தொடர்பாக ஒவ்வொரு பகுதிகளிலும் முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. நான் அங்கு சென்று அவர்களிடம் முகாமை முதலில் தலைமை அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று கூறினேன்.

    வீடு வீடாக சென்று ரீடிங் எடுப்பது போல் மீண்டும் வீடு வீடாக சென்று கட்டணத்தை குறைக்க வேண்டும் என கோரி முகாமை நிறுத்தியுள்ளேன். மின்துறையின் இந்த செயல் ஒரு கண்துடைப்பு நாடகம் ஆகும். ஒருசிலரின் லாபத்திற்காக இதுபோன்ற மின் மீட்டரை பொறுத்தியுள்ளனர். இதனால் ஏழை எளிய மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×