search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட நாய், குட்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள்.
    X
    மீட்கப்பட்ட நாய், குட்டிகளுடன் தீயணைப்பு வீரர்கள்.

    காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கி 4 நாட்கள் குட்டிகளுடன் உயிருக்கு போராடிய நாய்

    திருச்சியில் வெள்ளத்தில் தவித்த தாய் நாய் தனது குட்டிகளை பிரிய மனமில்லாமல் அவற்றை காப்பாற்ற 3 நாட்கள் நடு காவிரியில் தவித்த பாசப்போராட்டம் பார்த்தவர்களை நெகிழ செய்தது. #CauveryRiver
    திருச்சி:

    தாய் பாசம் மனிதர்களுக்கு மட்டுமல்ல. விலங்குகளுக்கும் உண்டு. குறிப்பாக இன்றைய உலகில் மனிதர்களை விட விலங்குகள் காட்டும் பாசம் தான் அதிகப்படியானது. இதை அவ்வப்போது வெளியாகும் செய்திகள் நிரூபித்து வருகின்றன.

    இந்நிலையில் திருச்சியில் வெள்ளத்தில் தவித்த தாய் நாய் தனது குட்டிகளை பிரிய மனமில்லாமல் அவற்றை காப்பாற்ற 3 நாட்கள் நடு காவிரியில் தவித்த பாசப்போராட்டம் பார்த்தவர்களை நெகிழ செய்தது.

    திருச்சி காவிரி ஆற்றில் கடந்த பல மாதங்களாக தண்ணீர் இல்லாததால் வறண்டு கிடந்தது. கரையோரத்தில் பலர் குடிசை வீடுகளை கட்டி குடியிருந்தனர்.

    மேட்டூரில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ள நீர் திறந்து விடப்பட்டதால் கரையோர பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக வெளியேறும் படி அதிகாரிகள் கூறி வெளியேற்றினர்.

    ஆனால் 5 அறிவு படைத்த விலங்கினங்களுக்கு இந்த எச்சரிக்கை எட்டாததால் அவை ஆற்றிலேயே இருந்தன. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக காவிரி ஆற்றில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளமாக பாய்ந்து கல்லணை நோக்கி சென்றது.

    அப்போது காவிரி ஆற்றில் திருச்சி - சென்னை சாலையில் ஓயாமாரி சுடுகாடு பாலத்தின் அருகில் திடீரென வெள்ளம் வந்ததால் நடு ஆற்றில் 2 குட்டிகளுடன் சுற்றிய நாய் எப்படி தப்பிப்பது என தெரியாமல் தவித்தது.

    தசாவதாரம் படத்தில் வரும் அலை போல பாய்ந்து வந்த வெள்ளத்தை பார்த்து அதிர்ந்த தாய் நாய் உடனடியாக தனது 2 குட்டிகளையும் வாயில் கவ்வி அருகில் இருந்த மேடான திண்டு பகுதிக்கு கொண்டு சென்று போட்டது. அதற்குள் வெள்ளம் நாய் இருந்த பகுதியை கடந்து பாய்ந்து சென்றது.

    வெள்ளநீர் தொடர்ந்து ஆற்றில் சென்றதால் நாயால் தனது குட்டிகளுடன் கரை பகுதிக்கு திரும்ப முடியவில்லை. திண்டு பகுதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரம் கரை இருந்ததால் குட்டிகளையும் பிரிந்து நாய் கரைக்கு திரும்ப விரும்பவில்லை.

    பிறந்து சில நாட்களே ஆன தனது குட்டிகளுக்கு பாலூட்டி பசி போக்கிய அந்த தாய் நாய் பட்டினியுடன் 4 நாட்களாக வெள்ளத்தை கடந்து கரைக்கு வர முடியாமல் குட்டிகளுடன் தவித்துக் கொண்டிருந்தது.

    காவிரி பாலத்தில் வாகனங்களும், ஆட்களும் செல்லும் போது மட்டும் தாய் நாய் குரைத்து தங்கள் பக்கம் யாராவது பார்க்க மாட்டார்களா? என உதவி கோரியது. அதிர்ஷ்டவசமாக நேற்று ஒருவர் நடு ஆற்றில் நாய் குட்டிகளுடன் தவிப்பதை பார்த்து புளுகிராஸ் அமைப்பிற்கு தகவல் கொடுத்தார்.

    நடு ஆற்றில் குட்டிகளுடன் நாய் தவித்த இடம்.

    இது குறித்து ராமகிருஷ்ணன் என்பவர் திருச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே தீயணைப்பு அலுவலர் தனபால் தலைமையில் வீரர்கள் முத்துக்குமார், ராஜ்குமார், மைக்கேல், சந்திரசேகர், பெரியசாமி, சதீஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    அங்கு காவிரி ஆற்றுக்குள் இறங்கிய வீரர்கள் கயிறு, ஏணி மூலம் திண்டு பகுதிக்கு சென்றனர். 4 நாட்கள் பசியில் அரைமயக்கத்தில் இருந்த தாய் நாயை வாயில் கயிற்றால் கட்டியும், குட்டி நாய்களை கூடையில் போட்டும் தோளில் சுமந்து தண்ணீரை கடந்து மீட்டு வந்தனர்.

    நடு ஆற்றில் தவித்த நாய் 4 நாட்களுக்கு பிறகு மீண்ட மகிழ்ச்சியில் வாலை ஆட்டியும், குரைத்தும் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறியது. நாய்க்கும் அதன் குட்டிகளுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    காவிரி ஆற்றில் நடந்த இந்த சம்பவம் நன்றி மறவாத நாய்க்கும், மனிதர்களுக்கும் உள்ள உறவை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. #CauveryRiver

    Next Story
    ×