search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை தாக்கிய 4 பேர் கைது
    X

    காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை தாக்கிய 4 பேர் கைது

    தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை தாக்கி அவரது கைப்பையை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணியரசன். இவர் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி சென்னை செல்வதற்காக தனது வீட்டில் இருந்து தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மணியரசன் புறப்பட்டார்.

    தஞ்சை மணிமண்டபம் அருகே அவர்கள் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் திடீரென மணியரசனை தாக்கினர். மேலும் அவரின் கைப்பையையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இதற்கிடையில் மணியரசனை தாக்கியது உள்நோக்கத்துடனே என்று பரபரப்பு பரவியது. அவரை வேண்டும் என்றே சிலர் தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்பு சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.ஜி.வரதராஜ், டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சுகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், தலைமை காவலர்கள் மோகன், இளையராஜ், சிவக்குமார், சண்முகம் மற்றும் போலீஸ் அருண் கொண்ட குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

    அப்போது தஞ்சை நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கரந்தை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சந்தேகப்படும்படி சிலரின் உருவப்படம் பதிவாகி இருந்தது. அந்த படத்தை வைத்து விசாரணை நடத்தியபோது, சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த முருகவேல் (வயது 33), அரியலூர் மாவட்டம் கீழப்பழூரை சேர்ந்த வினோத்குமார் (28), தஞ்சை குருவாடியை சேர்ந்த புஷ்பராஜ் (26), திருவையாறு நடுக்கடையை சேர்ந்த முகமது தவுபீக் (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் நாங்கள் 4 பேர் தான் பணத்திற்காக மணியரசனை தாக்கியது என்று வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.உள்நோக்கத்துடன் மணியரசன் தாக்கப்பட்டார் என்று வதந்தியாக பரவிய தகவலை முறியடித்து உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×