search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்லூரி பருவத்தில் ஏற்படும் தோல்விகளை மாணவர்கள் துன்பங்களாக கருதக்கூடாது- வைகோ
    X

    கல்லூரி பருவத்தில் ஏற்படும் தோல்விகளை மாணவர்கள் துன்பங்களாக கருதக்கூடாது- வைகோ

    பள்ளி கல்லூரி பருவத்தின் போது ஏற்படும் தோல்விகளை மாணவர்கள் துன்பங்களாக கருதக்கூடாது என்று வைகோ கூறினார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த விழாவில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்மொழி திராவிட மொழிகளின் மூல மொழி என்பதை கிறிஸ்தவ பாதிரியார்கள் அறிவித்துள்ளனர். விவிலியத்திற்கு யோவான் உள்பட 4 பேர் உரை எழுதியுள்ளனர். முதன்முதலில் அச்சில் பொறிக்கப்பட்ட மொழி தமிழ் மொழி என தூய யோவான் எழுதிய சுவிஷேசத்தில் இருந்து அறிய முடிகிறது. தமிழகத்தில் சமூக ஊடகங்கள் வாயிலாக கலாசார சீரழிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் நமது பண்பாடு, கலாசாரம் நரகப்படு குழியில் சிக்கி தவிக்கிறது. 5 ஆயிரம் பேர் பயிலும் கல்விக்கூடங்களில் 50 பேர் தான் தவறு செய்கின்றனர். அவர்களால் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயத்திற்கு தலைகுனிவு ஏற்படுகிறது. கல்வியும், கலாசாரமும் பாழ்படுகிறது. மாணவர்கள் தங்களது பள்ளி, கல்லூரி பருவத்தின் போது ஏற்படும் தோல்விகளை துன்பங்களாக கருதக்கூடாது.

    உலகில் துன்பப்படுபவர்கள் அதிகம் பேர் உள்ளனர். துயரமில்லாதவர்கள் என்று எவருமில்லை. ஆகவே மாணவிகள் துன்பப்படுபவர்களுக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் போல தன்னலம் கருதாமல் சேவைப்பணியாற்ற வேண்டும். தாய் தந்தையரின் கனவுகளை நிறைவேற்ற உழைக்க வேண்டும். உழைப்பின் மூலம் பெற்றோரின் கனவுகளை நிறைவேற்றி அவர்களுக்கு பெருமையை தேடித்தர வேண்டும். தமிழகத்தில் மது கலாசாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர். மது குடிப்பவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உள்ளது. நாம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவிடக் கூடாது. தன்னலம் கருதாமல் சமூக மேம்பாட்டிற்காக சேவை செய்பவர்களுக்கு இதுபோன்ற விழாக்கள் கட்டாயம் நடத்தவேண்டும் என்று பேசினார்.

    இதில் கல்வியாளர்கள் ரோவர் வரதராஜன், சீனிவாசரெட்டியார், சிவசுப்ரமணியன், முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், ம.தி.மு.க. அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×