search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது- சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு
    X

    மத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது- சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு

    மத்திய அரசு அவசர நிலையை மக்கள் மீது திணிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி குற்றம் சாட்டினார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை பிரகடன தினத்தை அனுசரித்து, பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் மட்டுமே இந்தியாவில் ஜனநாயகத்தை மீட்க முடியும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அவசர நிலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக நடந்தபோது அதற்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துரோகம் இழைத்தது. ஆனால் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், பா.ஜ.க.வினரும் அவசர நிலையை எதிர்த்து தீவிரமாக போராடியதாகவும், ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை தாங்களையே சாரும் என்றும் பெருமை கொள்கிறார்கள்.

    உண்மையிலேயே ஜனநாயகத்தை மீட்டெடுத்த பெருமை நாட்டு மக்களையே சாரும். நிர்வாக ரீதியாக அவசர நிலையை மக்கள் மீது மத்திய அரசு திணிக்கிறது. அவசர நிலையின் போது நீதித்துறைக்கு எதிராக இந்திராகாந்தி என்ன செய்தாரோ அதையே தற்போதைய பா.ஜ.க. அரசும் செய்கிறது. மத்திய அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்தியுள்ளது. அரசியல் சாசனத்தால் ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு அமைப்புகளும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

    அவசர நிலை அறிவித்தபோது அதற்கெதிரான போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்து போராடியது போல, தற்போதைய அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்திலும் எங்களது கட்சி முன்னணியில் இருக்கும். அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து தீவிரமாக போராடுவோம். விவசாயிகளின் நிலங்களையும், பொதுமக்களின் வீடுகளையும் அழித்து சென்னை-சேலம் இடையே பசுமை வழிச்சாலை அமைப்பது தேவையற்றது.

    தி.மு.க. உடன் கூட்டணி அமைப்பது குறித்து மத்திய, மாநிலக்குழு உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். மாநிலத்தில் இருந்து அ.தி.மு.க.வும், மத்தியில் இருந்து பா.ஜ.க.வும் அகற்றப்படவேண்டும். அதற்கான குறிக்கோளை எட்டும் வகையில் எங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். மத்திய அரசின் அரசியல் ரீதியிலான நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தும் வகையில் தமிழக கவர்னர் செயல்பட்டால் கண்டனத்துக்குரியது.

    பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது. ஜனநாயகம் இல்லாத சவுதி அரேபியா, ஏமன், சிரியா, ஈரான் போன்ற நாடுகள் கூட இந்தப்பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்தபடியாகத்தான் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். #tamilnews
    Next Story
    ×