search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல், சோனியாவை சந்தித்ததால் கமல்ஹாசனுக்கு எந்த பலனும் இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    ராகுல், சோனியாவை சந்தித்ததால் கமல்ஹாசனுக்கு எந்த பலனும் இல்லை- பொன்.ராதாகிருஷ்ணன்

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட ராகுல், சோனியாவை சந்தித்ததால் கமல்ஹாசனுக்கு எந்த பலனும் இல்லை என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #KamalHaasan #Congress
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று நடந்த சர்வதேச யோகா தினத்தில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி முடிந்த பின்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை கமல்ஹாசன் சந்தித்து உள்ளாரே?

    பதில்: மக்களால் புறந்தள்ளப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை கமல்ஹாசன் சந்தித்து பேசியுள்ளார். இதனால் அவருக்கு எந்த பலனும், பயனும் இல்லை.

    கே: தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாகவும், அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறதே?

    ப: இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதில் பாரதிய ஜனதா கட்சிக்கும், எனக்கும் எந்த உடன்பாடும் இல்லை. தமிழகத்தில் 1967-ம் ஆண்டுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி காலத்தில் பல்வேறு அணைகள், விவசாய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் சிலவற்றை தியாகம் செய்ய வேண்டும். ஆனால் இங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துகிறார்கள். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலை பணிகளுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதியையும் ஒதுக்கியது. ஆனால் இங்குள்ளவர்கள் மக்களை ஏமாற்றி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள்.

    கே: தமிழகத்தில் பயங்கரவாதிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் நீங்கள் குற்றம் சாட்டியுள்ளீர்களே?

    ப: பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே நான் கூறினேன். ஆனால் அப்போது அரசும், தமிழக உளவுத்துறையும் அதனை மறுத்தது.

    இப்போது மத்திய உளவுத்துறை மூலம் இங்கு பயங்கரவாதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காதது ஏன்?

    கே: விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மலைகளை உடைத்து கற்கள் கொண்டுச் செல்லப்படுகிறதே? இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படாதா?

    ப: குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைய வேண்டும். இங்கு துறைமுகம் அமைந்தால் 20 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். துறைமுக திட்டத்தை எதிர்ப்பவர்கள் இலங்கை அரசின் கைக்கூலிகள். ராஜபக்சேயின் விசுவாசிகள். சீன அரசுக்கு சாதகமாக செயல்படுபவர்கள். இங்குள்ள மக்கள் மீதும், அவர்களின் வளர்ச்சியிலும் அக்கறை இல்லாதவர்கள்.

    விழிஞ்ஞத்தில் துறைமுகம் அமைக்கும் திட்டத்திற்கு அப்போதே நான் ஆதரவு தெரிவித்தேன். குமரி மாவட்டத்தில் துறைமுகத்தை எதிர்ப்பதற்கு 100 சதவீத வெளிநாட்டு சதி உள்ளது. குமரி மாவட்ட முன்னேற்றத்திற்கு எதிராக இருப்பவர்களால், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வழங்க முடியுமா? குமரி மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்கிறார்கள். அவர்களுக்கு இங்கு வேலை வழங்க முடியுமா?

    மத்திய மந்திரி என்பதை தாண்டி நான் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் என்ற முறையில் இங்கு முன்னேற்ற திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறேன்.


    கே: 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

    ப: தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக செயல்படுவதை விடுத்து உருப்படியான செயல்களை அவர் மேற்கொள்ள வேண்டும். தமிழகம் குட்டிசுவராக மாறியதற்கு தி.மு.க.வும், அ.தி.மு.க.வுமே காரணம்.

    கே: காவிரி பிரச்சனையில் இப்போதும் கர்நாடக அரசு பிடிவாதமாக இருக்கிறதே?

    ப: கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி அமைய காங்கிரசும், அவர்களின் தோழமை கட்சியான தி.மு.க.வும் முயற்சி செய்தது. எனவே மு.க.ஸ்டாலினும், திருநாவுக்கரசரும் சிறப்பு விமானத்தில் கர்நாடகம் சென்று குமாரசாமியுடன் பேசி காவிரி தண்ணீரை பெற்று தர வேண்டும். இல்லையேல் அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவி மீனாதேவ், நிர்வாகிகள் முத்துராமன், தேவ் ஆகியோர் உடன் இருந்தனர். #PonRadhakrishnan #KamalHaasan #Congress
    Next Story
    ×