search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜூலை மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி - செங்கோட்டையன்
    X

    ஜூலை மாதம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி - செங்கோட்டையன்

    அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி ஜூலை மாதம் தொடங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #ministersenkottaiyan #NEETexam #NEETtraining
    சென்னை:

    தென்னிந்திய மண்டல பட்டயக் கணக்காளர்களின் 6-வது மாநாடு சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளராக மாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மாணவர்களின் திறன்களை வளர்க்கக்கூடிய 15 பாடத்திட்டங்கள் வருகின்ற கல்வியாண்டில் கொண்டு வர இருக்கிறோம். அப்படி வருகின்ற போது மாணவர்கள் அந்தந்த பகுதியில் இருக்கின்ற நிலைக்கேற்ப கல்வியினை கற்று வேலைவாய்ப்பினை பெறுவதற்கு இந்த அரசு உத்தரவாதம் அளிக்கிறது.

    இன்று படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் சிறந்த நூலக வசதியை தர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கும் நடமாடும் நூலகங்கள் மிக விரைவில் ஏற்பாடு செய்ய இருக்கிறோம்.

    அதன் மூலமாக ஒவ்வொரு பள்ளிகளுக்கும் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் செல்லுகின்ற போது நூல்களை கற்று சிறந்த கல்வியாளராக உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனம் இதனை ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.

    மேலும் நம்முடைய மாணவர்கள் சிறந்த ஆங்கிலத்தை கற்றுக் கொள்வதற்கு ஜெர்மன், இங்கிலாந்து நாடுகளில் இருந்து பயிற்சியாளர்கள் மிக விரைவில் வருகை தர இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த ஆங்கிலத்தை கற்று தருவார்கள்.

    மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தேர்வுகள் எப்போது நடைபெறும், முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பதை இந்திய நாட்டின் வரலாற்றில் தமிழகத்தில் மட்டும்தான் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஆண்டு நீட் தேர்வில் ஏறக்குறைய 1412 மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். மதிப்பெண் வேறு, தேர்ச்சி என்பது வேறு. இந்த மாணவர்களுக்கு 4 வார காலம்தான் பயிற்சி அளிக்கப்பட்டன.

    இனி வரும் காலங்களில் ஜூலை மாதத்தில் பயிற்சி தொடங்கப்படும். 412 மையங்களில் பயிற்சி அளிப்பதன் மூலம் வரும் காலங்களில் தமிழகம் நீட் தேர்வில் முன்னணி மாநிலமாக திகழ்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



    அனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நீட் தேர்வு பயிற்சி இலவசமாக கற்றுத் தரப்படும்.

    எம்.பி.பி.எஸ். கட்-ஆப் மதிப்பெண் 3 நாட்களில் வந்து விடும். குறைந்தது 150 பேர் மருத்துவ படிப்பிற்கு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று நம்புகிறேன்.

    மாணவர்கள் தொழில் கல்வியை பெறும் வகையில் அந்தந்த மாவட்டங்களில் எந்த தொழிலுக்கு சிறப்பு இருக்கின்றதோ அதன் அடிப்படையில் வரும் கல்வி ஆண்டில் 12 பாடப் பிரிவுகள் தொடங்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஓட்டல் நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் போன்ற படிப்புகளை இந்த ஆண்டே கற்று தருகிறோம். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஓட்டல்கள், மருத்துவமனைகளில் வேலை வாய்ப்பை பெற முடியும்.

    வேளாண்மை தொழில் சார்ந்த பயிற்சியும், காய்கறிகளை பதப்படுத்துதல் போன்ற பயிற்சியும், ஜவுளி தொழில் குறித்த பயிற்சியும் இந்த ஆண்டு முதல் அளிக்கப்பட இருக்கிறது.

    தொழிற்சாலைகளிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.

    பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டங்கள் வரலாற்று திட்டமாக அமைந்துள்ளது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் 40 சதவீத நீட் தேர்வு சம்பந்தமான பாடப் பகுதி இடம் பெற்றுள்ளது.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு அழுத்தம் திருத்தமாக இருக்கிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். வழக்கு நிலுவையில் இருக்கிறது.

    பொறியியல் படித்து விட்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு பட்டய கணக்காளர் பயிற்சி வழங்கப்படும். பிளஸ்-2 முடித்தவுடன் வேலை பெறும் வகையில் அரசு பயிற்சி வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ministersenkottaiyan #NEETexam #NEETtraining

    Next Story
    ×