search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை-பெங்களூரு இடையே குளிர்சாதன வசதி கொண்ட இரட்டை அடுக்கு ரெயில்- மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்
    X

    கோவை-பெங்களூரு இடையே குளிர்சாதன வசதி கொண்ட இரட்டை அடுக்கு ரெயில்- மத்திய மந்திரி தொடங்கி வைத்தார்

    கோவையில் இருந்து பெங்களூருவுக்கு முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய இரட்டை அடுக்கு ரெயிலை மத்திய மந்திரி தொடங்கிவைத்தார்.
    கோவை:

    கோவையில் இருந்து பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இரட்டை அடுக்கு ரெயில் (டபுள் டக்கர்) இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில் தொடக்க விழா கோவை ரெயில் நிலைய வளாகத்தில் நேற்று காலையில் நடந்தது. மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹெயின் கலந்துகொண்டு கொடியசைத்து இரட்டை அடுக்கு ரெயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார். தொடக்க நாளான நேற்று மட்டும் இந்த ரெயில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டது.

    முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரெயிலில் வை-பை வசதி, ஜி.பி.எஸ்.கருவி, பயோடாய்லெட் வசதி, சூரிய ஒளியை திருப்பி அனுப்பக்கூடிய மேற்கூரை, பயணிகள் குறித்த தகவலை தெரிவிக்கும் எல்.இ.டி. திரைகள் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன.

    மொத்தம் 10 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில் 8 பெட்டிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். இதில் 3 பெட்டிகளில் உணவு சாப்பிடும் வகையில் இடவசதி செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 912 பேர் பயணம் செய்யலாம். வாரந்தோறும் திங்கட்கிழமையை தவிர மற்ற அனைத்து நாட்களும் இந்த ரெயில் இயக்கப்படுகிறது.

    தினமும் காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு (வண்டி எண் 22666) பிற்பகல் 12.40 மணிக்கு பெங்களூரு சென்றடையும். பின்னர் அங்கிருந்து மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 22665) இரவு 9 மணிக்கு கோவை வந்து சேரும். பயண கட்டணம் ரூ.610 ஆகும்.

    தொடக்க நாளான நேற்று இந்த ரெயிலில் 150 பயணிகள் மட்டுமே பயணம் செய்தனர். பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. முதல் நாள் என்பதால் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததாகவும், நாட்கள் செல்ல செல்ல பயணிகள் கூட்டம் அதிகரித்து விடும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×