search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவிகள் தற்கொலையால் தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி - ஐகோர்ட்
    X

    மாணவிகள் தற்கொலையால் தமிழக அரசுக்கு எதிராக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி - ஐகோர்ட்

    நடப்பு ஆண்டிலும் ‘நீட்’ தேர்வில் தோல்வியடைந்த மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதால், தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர ஐகோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. #NEET #highcourt
    சென்னை:

    மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘நீட் தேர்வின் தோல்வியால் ஏற்படும் மரணங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும். பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும்’ என்பது உள்பட பல உத்தரவுகளை தமிழக அரசுக்கு பிறப்பித்து இருந்தார்.

    இந்நிலையில், பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபாவும், திருச்சியைச் சேர்ந்த மாணவி சுபஸ்ரீயும் ‘நீட்’ தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டனர்.

    இந்த நிலையில், நீதிபதி என்.கிருபாகரன் முன்பு வக்கீல் சூர்யபிரகாசம் ஆஜராகி, ‘நீட் தேர்வினால் கடந்த ஆண்டு அரியலூர் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதனால், நீட் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதமாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது உள்பட பல உத்தரவுகளை ஐகோர்ட்டு பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. அதனால், நடப்பு கல்வி ஆண்டிலும் மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். எனவே, ஐகோர்ட்டு உத்தரவை தீவிரமாக அமல்படுத்தாத தமிழக அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு தொடர்ந்தால் வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார். #NEET #NEET2018 #highcourt
    Next Story
    ×