என் மலர்tooltip icon

    செய்திகள்

    இது மக்கள் அரசா... மக்களை கொல்லும் அரசா? - ஈரோட்டில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்
    X

    இது மக்கள் அரசா... மக்களை கொல்லும் அரசா? - ஈரோட்டில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராடிய மக்கள் போலீசார் துப்பாக்கிச் சூட்டில் பலியானதை கண்டித்து ஈரோட்டில் “இது மக்கள் அரசா மக்களை கொல்லும் அரசா?” என கட்சிகள் கோஷங்கள் எழுப்பினர்.
    ஈரோடு:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டம் போர்க்களமாக மாறியது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புகுந்த போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் பொது நல அமைப்பினர் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

    பெருந்துறையில் நேற்று மாலை புதிய பஸ் நிலையம் எதிரே அனைத்துக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்ப்புலிகள் கட்சிகளின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் தலைமை தாங்கினார்.

    தி.மு.க. நகர துணை செயலாளர் செல்வராஜ் விடுதலை கட்சி சிறுத்தைகள் கட்சி மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயபாலன் பா.ம.க நகர நிர்வாகி அலெக்சாண்டர் தமிழ்புலிகள் கட்சியின் பெருந்துறை ஒன்றிய செயலாளர் கார்த்திக் ஆதி தமிழர் கட்சி சுரேஷ் விடுதலை வேங்கை கட்சியின் மாவட்ட செயலாளர் அழகர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “இது தமிழர் நாடு தமிழர் நாடு .. தமிழர் நாடு ...கார்ப்பரேட் நிறுவனமே வெளியேறு..” “கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. அப்பாவி மக்களை கொன்று ஒழித்த காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறோம்..” “இது மக்கள் அரசா மக்களை கொல்லும் அரசா?” போன்ற கோ‌ஷங்களை எழுப்பினர்.

    ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே புரட்சி கர இளைஞர் முன்னணி இயக்கம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான பேர் கலந்து கொண்டு கோ‌ஷங்களை முழங்கினார்கள்.
    Next Story
    ×