search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு
    X

    காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: அரசியல் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருப்பதின் மூலம் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:-

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தில் மத்திய அரசு கூறியுள்ள யோசனை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதன் மூலம் தான் தங்களின் தீர்ப்பை செயல்படுத்த முடியும் என்று காவிரி நடுவர் மன்றம் தெளிவாக கூறியிருந்த நிலையில், அதற்கு மாறாக மேற்பார்வை வாரியம் அமைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியிருப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு திட்டம் தமிழக நலன்களுக்கு எதிரானது என்பதால் இந்த திட்டத்தை நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணையின் போது தமிழகம் கடுமையாக எதிர்க்க வேண்டும். மத்திய அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். காவிரி மேற்பார்வை வாரியம் தான் இறுதியான அமைப்பு என்று அறிவிக்கப்பட்டால், அதைக் கண்டித்து தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. நடத்தும்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கர்நாடகம் எதிர்க்கிறது என்பதை காரணமாக காட்டி, அரசியல் சட்ட அதிகாரம் இல்லாத ஒரு வெற்று மேற்பார்வை குழுவை அமைக்க செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மன்னிக்கவே முடியாத அநீதி.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு நிகரான நடுவர் மன்ற தீர்ப்பை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்திடும் வகையில் மத்திய அரசு வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி, தமிழகத்தின் ஈராயிரம் ஆண்டுகால மரபு உரிமையை தட்டிப்பறிக்க நினைப்பதை தமிழக மக்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

    சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக இறுதித்தீர்ப்பு வெளியாகும், அது நிரந்த தீர்வுக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கிடந்த தமிழக விவசாயிகளும், மக்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் வருகிற 16-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வெளியாகும் தீர்ப்பு இறுதி தீர்ப்பாக, அது நிரந்த தீர்வாக அமைந்து தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். அந்த இறுதி அறிவிப்புக்கு பிறகு உடனே மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டு, அதில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டால் அறிவிக்கப்பட இருக்கும் அமைப்புக்கோ அல்லது குழுவுக்கோ அல்லது ஆணையத்துக்கோ எதுவாக இருந்தாலும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதுகுறித்து அரசிதழில் வெளியிட வேண்டும்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    காவிரி மேலாண்மை வாரியம் குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாமல் செயல்திட்டம் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த காவிரி அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் நதிநீர் பங்கீடு எந்த அளவுக்கு உண்மைத்தன்மையுடன் பகிர்ந்தளிக்கப்படும் என்ற சந்தேகம் எழுகிறது. நதிநீர் பங்கீட்டில் நடுநிலையாக செயல்பட்டு முழு அதிகாரம் செலுத்தும் ஆளுமை காவிரி அமைப்புக்கு இல்லாதபட்சத்தில் இந்த செயல்திட்ட வரைவினை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு நிரந்தர தீர்வு காணும் வரை உரிமையை மீட்க போராடும் தமிழர்களுக்கும், தமிழக விவசாயிகளுக்கும் உறுதுணையாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    காவிரி பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது தமிழகத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் துரோகம். அந்த வரைவு திட்டத்தின் நகல் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் உள்ள விவரங்களை விவாதித்து தமிழக அரசின் சார்பில் 16-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. காவிரி பிரச்சினை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து நிலையான கருத்தை இறுதி செய்ய உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

    தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:-

    காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அவமதிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு செயல் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை முற்றிலும் தமிழக நலனுக்கு எதிரானதும், கர்நாடகாவுக்கு ஆதரவானதும் ஆகும். இதுகுறித்து விவாதிக்க அவசரமாக அனைத்து கட்சி, விவசாயிகள் சங்க கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். 
    Next Story
    ×