
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 4 ஆண்டுகளாகவே போதிய அளவு மழை இல்லாததால் வனப்பகுதியில் வறட்சி நீடித்தது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்தனர். மேலும் வனவிலங்குகளும் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தது.
அதன்பின்பு ஓரளவு மழை கைகொடுத்ததால் தற்போது அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் டம்டம்பாறை எலிவால் நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், வெள்ளிநீர்வீழ்ச்சி, உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நேற்றிரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். கோடையை தணிக்க மழை பெய்துள்ளதால் பல்வேறு சுற்றுலா இடங்களை மழையில் நனைந்தவாறே சுற்றி பார்த்தனர்.
கோடைவிழா மலர் கண்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பெய்த மழையால் சில இடங்களில் பூக்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் தோட்டக்கலை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பெய்துள்ள மழையால் நகர்பகுதிக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. விவசாயிகளும் உருளை, சவ்சவ், கேரட், பூண்டு உள்ளிட்டவைகளை நடவு செய்யும் பணியில் தீவிரம் காட்டியுள்ளனர்.