search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2011-ம் ஆண்டு சசிகலா போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்:  திவாகரன் பரபரப்பு வாக்குமூலம்
    X

    2011-ம் ஆண்டு சசிகலா போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றப்பட்டார்: திவாகரன் பரபரப்பு வாக்குமூலம்

    சோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று திவாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். #JayalalithaaDeathProbe #InquiryCommission
    சென்னை:

    சோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று விசாரணை ஆணையத்தில் திவாகரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. சசிகலாவின் உறவினர்களான மருத்துவர் சிவக்குமார், இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோர் ஏற்கனவே விசாரணை ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இந்தநிலையில் ஆணையம் அனுப்பிய சம்மன் அடிப்படையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் நேற்று காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜர் ஆனார். அவருடன் ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர்.

    ஜெயலலிதாவுடன் உங்கள் குடும்பத்தினருக்கு(சசிகலா, நடராஜன் மற்றும் அவர்களது உறவினர்களுடன்) எப்படி நெருக்கம் ஏற்பட்டது?, ஜெயலலிதாவை உங்களுக்கு எத்தனை ஆண்டுகளாக தெரியும்?, ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றி தெரியுமா? என்பது போன்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் திவாகரன் பதில் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நேரில் பார்த்தீர்களா? என்று நீதிபதி கேட்டதற்கு, ஒரு முறை இரவு 11 மணிக்கு அவரை பார்க்க சென்றபோது அவர் தூங்கி கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை என்றும், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி ஜெயலலிதா உடல்நிலை மோசமான தகவல் கேட்டு அன்றைய தினம் இரவு மருத்துவமனைக்கு வந்ததாகவும் பதில் அளித்துள்ளார்.

    அன்று இரவு மருத்துவமனையில் நடந்தது குறித்து தெரியுமா? என்று நீதிபதி கேட்டதற்கு, அன்றைய தினம் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமானதைத் தொடர்ந்து அடுத்த முதல்-அமைச்சரை தேர்வு செய்வது சம்பந்தமாக உடனடியாக முடிவு எடுக்கும்படி அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவை கவர்னர் கேட்டுக்கொண்டதாகவும், அதன் அடிப்படையில் ராமமோகனராவ் சசிகலா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாகவும் பதில் அளித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணத்தில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? என்று கேட்டதற்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும், அவரது மரணம் இயற்கையானது என்றும் பதில் அளித்துள்ளார்.

    மேலும், ‘சோ, ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் டி.ஜி.பி. ராமானுஜம் ஆகியோர் ஆலோசனையின் பேரிலேயே 2011-ம் ஆண்டு சசிகலாவை போயஸ்கார்டனில் இருந்து வெளியேற்றுவது தொடர்பான முடிவை ஜெயலலிதா எடுத்தார்.

    2011-ம் ஆண்டு போயஸ்கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதற்கு பின்னர் நான் அங்கு செல்லவில்லை. 2014-ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவின் உடல்நிலையை கவனித்துக்கொள்ள செவிலியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணி பிரிந்ததுடன் நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அப்போது பா.ஜ.க.வை வீழ்த்த பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த கன்ஷிராமுடன் பேசுவதற்கு சசிகலாவின் கணவர் நடராஜன் உதவியைத் தான் ஜெயலலலிதா பெற்றார் என்றும் திவாகரன் தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக கூறப்படுகிறது.

    மதியம் 2.30 மணி வரை 4 மணி நேரம் திவாகரன் வாக்குமூலம் அளித்தார்.

    இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த திவாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜெயலலிதாவை அமைச்சர்கள், அதிகாரிகள் சிலர் பார்த்ததாக பிறர் சொல்ல கேள்விப்பட்டேன். ஜெயலலிதா அழைத்ததன் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் சென்று பார்த்திருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. காவிரி பிரச்சினைக்காக அதிகாரிகளை சந்தித்து ஜெயலலிதா பேசியதாக கேள்விப்பட்டேன்.

    ஜெயலலிதா இறப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக தேர்ந்து எடுக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தை அவசரகதியில் தேர்வு செய்யவில்லை.

    முதல்-அமைச்சர் இல்லாமல் ஒரு நாடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் அவர் உடனடியாக தேர்வு செய்யப்பட்டார். முதல்-அமைச்சர் போட்டியில் சிலர் இருந்தார்கள். அதை இப்போது சொல்வது சரியாக இருக்காது.

    ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எந்த அறிவுரையும் கூறவில்லை. அந்த விவகாரத்தை பொறுத்தமட்டில் மருத்துவ சம்பந்தப்பட்ட விவகாரம்.

    வெளிநாட்டுக்கு அழைத்து செல்வதற்கான உரிய நேரத்துக்காக அப்பல்லோ நிர்வாகம் காத்திருந்து இருக்கலாம். இந்த கேள்விக்கு நான் பதில் சொல்வது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திவாகரன் தனது வாக்குமூலத்தில் கூறி உள்ள விஷங்களிலும், சசிகலா தனது வாக்குமூலத்தில் கூறி உள்ள விஷங்களிலும் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேவைப்படும்பட்சத்தில் திவாகரனிடம் சசிகலா தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

    ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது அவரிடம் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷீலாப்பிரியாவுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    அதன்படி அவர், இன்று(4-ந் தேதி) காலை 10.30 மணிக்கு ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்கிறார்.  #JayalalithaaDeathProbe #InquiryCommission
    Next Story
    ×