search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை
    X

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வேலூர் மற்றும் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 2 நாள் சுற்றுப்பயணமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.45 மணிக்கு சென்னை வருகிறார்.

    அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் செல்கிறார். அங்கு சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவக்கல்லூரி நூற்றாண்டு விழா, ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிறுநீரக மாற்று, இருதய அறுவை சிகிச்சை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

    பின்னர் ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்கக்கோவிலுக்கு சென்று ஜனாதிபதி சாமி தரிசனம் செய்கிறார்.

    பின்னர் வேலூரில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 5.40 மணிக்கு ஜனாதிபதி சென்னை திரும்புகிறார். விமான நிலையத்தில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகைக்கு சாலைமார்க்கமாக மாலை 6.05 மணிக்கு அவர் சென்றடைகிறார். கவர்னர் மாளிகையில் இரவு தங்கும் அவர், முக்கிய பிரமுகர்களை சந்திக்க உள்ளார்.

    அதனைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா, வேளச்சேரி குருநானக் கல்லூரியில் குரு அமர் தாஸ் மற்றும் சாகித் பாபா தீப் சிங் கட்டிட அரங்குகள் திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார்.

    பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை மதியம் 1.15 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு டெல்லிக்கு மாலை 4.10 மணியளவில் சென்றடைகிறார்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. விழா நடைபெறும் இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

    அவருடைய நிகழ்ச்சிகள் சாலைமார்க்க பயண திட்டமாக அமைந்திருப்பதால் வழி நெடுகிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகையையொட்டி நேற்று பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டன. 
    Next Story
    ×