search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவிப்பு
    X

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு- ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அறிவிப்பு

    தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவித்துள்ளார். #18MLAsDisqualification #HighCourt
    சென்னை:

    அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைந்ததற்கு டி.டி.வி. தினகரன் எதிர்ப்பு தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

    இதையடுத்து தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். அவர் பக்கம் 18 எம்.எல்.ஏ.க்களும் சென்றனர். அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று தமிழக கவர்னரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு தாங்கள் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்து இருந்தனர்.

    18 பேரும் கொறடா உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக கவர்னரிடம் மனு கொடுத்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் கடிதம் கொடுத்தார்.

    இதையடுத்து தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் வழக்கு விசாரணையின் போது இந்த வழக்கின் எழுத்துப் பூர்வமான வாதங்களை கொண்ட மனுக்களை எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் பி.எஸ்.ராமன், வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.

    இதே போல் அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ராஜகோபாலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை கொண்ட மனுக்களை தாக்கல் செய்தார். இதில் வக்கீல்கள் வாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து ஜனவரி 24-ந்தேதி உத்தரவிட்டனர்.

    இந்த நிலையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சபாநாயகரின் நிர்வாக அதிகாரத்தில் தலையிட முடியாது என்று அறிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பு கடும் விமர்சனத்திற்குள்ளானது. பலரும் இதுபற்றி கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதுபற்றி தலைமை நீதிபதியிடம் இன்று தெரிவிக்கப்பட்டது.

    வக்கீல் சூரியபிரகாசம் ஆஜராகி, ‘11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கின் தீர்ப்பை ஐகோர்ட்டு நேற்று பிறப்பித்தது. இந்த தீர்ப்பு வழங்கப்படவில்லை. வாங்கப்பட்டுள்ளது என்று வழக்கு தொடர்ந்த (டி.டி.வி. தினகரனின் ஆதரவாளரான) தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

    எனவே, அவர் மீது இந்த ஐகோர்ட்டு தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்ய வேண்டும். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியதாவது:-

    ‘நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்வதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. அதன்படி, இந்த ஐகோர்ட்டின் தீர்ப்பை அவர் விமர்சனம் செய்திருக்கலாம். இதுதொடர்பாக நாங்கள் தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்ய முடியாது.

    அதேநேரம், நீங்கள் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தால், அந்த வழக்கை ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.’

    ‘எங்களை பொருத்தவரை, நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டு தீர்ப்பு வழங்கியுள்ளோம். மனசாட்சிக்கும், கடவுளுக்கும் பயந்து தீர்ப்பு வழங்கியுள்ளோம். நடுநிலையாக நாங்கள் செயல்பட்டுள்ளோம்.’

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து சென்னை பெரம்பூரை சேர்ந்த தேவராஜன் என்பவர் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக தொடுத்துள்ள வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அப்துல் குத்தூஸ் விசாரணைக்கு எடுத்தனர்.

    அப்போது மனுதாரர் ஆஜராகி, ‘நான் சென்னை பெரம்பூர் தொகுதியில் வசிக்கிறேன். எங்கள் தொகுதியின் எம்.எல்.ஏ. வெற்றிவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், எம்.எல்.ஏ. இல்லாமல் பெரம்பூர் தொகுதி காலியாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே, தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தர விட வேண்டும்’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு விரைவில் பிறப்பிக்கப்படும். வழக்கின் தீர்ப்பை எப்போது பிறப்பிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். எனவே, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்’ என்று கூறி உத்தரவு பிறப்பித்தனர்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை தலைமை நீதிபதியுடன் விசாரித்த நீதிபதி சுந்தர் தற்போது ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்குகளை விசாரித்து வருகிறார். அதனால் தீர்ப்பு அளிக்க அவர் சென்னை வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால் கோடை விடு முறையில் இந்த வழக்கின் தீர்ப்பை பிறப்பிக்க நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி வருகிற மே 7-ந்தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக ஐகோர்ட்டு வட்டாரத்தில் கூறப்படுகிறது. #18MLAsDisqualification #HighCourt
    Next Story
    ×