search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊருக்குள் புகுந்து ஓடிய காட்டு யானை: பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு
    X

    ஊருக்குள் புகுந்து ஓடிய காட்டு யானை: பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு

    வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்து ஓடிய காட்டு யானை பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேப்பனப்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கர்நாடக மாநில எல்லை வனப்பகுதிகள் உள்ளன. இங்கு இருந்து 3 காட்டு யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் வந்தன. நேற்று முன்தினம் கொங்கனப்பள்ளி வனப்பகுதியில் இருந்த 3 காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்தும், தின்றும் அட்டகாசம் செய்தன. இதில் எப்ரி கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை நாசம் செய்தன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் 3 யானைகளில் ஒரு ஆண் யானை பிரிந்து கர்நாடக மாநில எல்லையான சாகரசனப்பள்ளி கிராமத்திற்குள் சென்று இரவு வயலில் காவலுக்கு இருந்த விவசாயி நாகராஜ் (வயது 45) என்பவரை மிதித்து கொன்றது. பின்னர் அந்த ஆண் யானை வேப்பனப்பள்ளி அருகே உள்ள கடவரப்பள்ளி, ஜோடுகொத்தூர், திம்மசந்திரம், பன்னப்பள்ளி, மணவாரப்பள்ளி, நேரலகிரி பகுதிக்கு வந்தது.

    இந்தநிலையில் அந்த யானை நேற்று அதிகாலை ஜோடுகொத்தூர் கிராமத்திற்குள் புகுந்தது. இந்த யானையை பொதுமக்கள் விரட்ட முயன்றனர். அப்போது திடீரென்று பொதுமக்கள் கூட்டத்தை கண்ட யானை மதம் பிடித்தபடி அவர்களை ஓட, ஓட விரட்டியது. இதில் பொதுமக்கள், சிறுவர்கள் ‘தப்பித்தோம் பிழைத்தோம்’ என்று ஓடி உயிர் பிழைத்தார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் காட்டு யானையை பட்டாசு வெடித்தும், மேளங்கள் அடித்தும், பொதுமக்கள் உதவியுடன் விரட்டினார்கள். இதைத் தொடர்ந்து அந்த யானை கர்நாடக மாநில எல்லையான எப்ரி வனப்பகுதிக்குள் சென்றது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வேப்பனப்பள்ளி பகுதியில் 3 யானைகள் தனித்தனியாக பிரிந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    எனவே வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், வனப்பகுதியையொட்டி உள்ள இடங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்கள். 
    Next Story
    ×