search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசியல் முதல் பயணம் - நெடுவாசல் போராட்டத்தில் குதிக்கிறார் கமல்
    X

    அரசியல் முதல் பயணம் - நெடுவாசல் போராட்டத்தில் குதிக்கிறார் கமல்

    கமல்ஹாசன் தனது முதல் அரசியல் சுற்றுப் பயணத்தின்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் புதுக்கோட்டை நெடுவாசல் மக்களை சந்தித்து பேச இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. #KamalHaasan
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி அரசியல் களத்தில் குதித்துள்ளார். மதுரையில் பிரமாண்டமான மாநாட்டை நடத்தி கட்சியின் பெயரை அறிவித்த கமல் கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

    இதனை தொடர்ந்து தனது அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் என்னென்ன என்பது பற்றிய அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார். மதுரையை போன்று திருச்சியில் அடுத்த கூட்டத்தை நடத்த இருப்பதாகவும் ஏப்ரல் 4-ந்தேதி அந்த கூட்டம் நடைபெறும் என்றும் கமல் தெரிவித்தார். திருச்சியில் நடைபெறப் போகும் கமல் கட்சியின் இந்த கூட்டமும் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்சியில் நடைபெற உள்ள மக்கள் நீதி மய்யத்தின் கூட்டத்தை, மதுரையில் நடந்த கட்சியின் தொடக்க விழா மாநாட்டை போன்றே பிரமாண்டமாக நடத்தவும் கமல் முடிவு செய்துள்ளார். இந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களும் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்த கூட்டத்துக்கு செல்லும் போது, அருகில் உள்ள மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கமல் முடிவு செய்துள்ளார். திருச்சி செல்லும் வழியில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு செல்லும் வகையிலும் கமலின் சுற்றுப் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

    இதன் பின்னர் புதுக்கோட்டை நெடுவாசலில் விவசாயிகளுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மக்களையும் சந்தித்து பேசுகிறார். அரசியல் கட்சியை தொடங்கிய பின்னர் கமல் குதிக்கும் முதல் போராட்ட களம் இதுவாகும். நெடுவாசல் போராட்ட களத்தில் கமல் என்ன பேசப் போகிறார் என்பது பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



    இந்த சுற்றுப்பயணத்தின் போது நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் வீட்டுக்கு செல்லவும் கமல் திட்டமிட்டுள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் தமிழகத்திலும் நீட் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த மாணவி அனிதா தனது டாக்டர் கனவு கலைந்ததால் தூக்கில் தொங்கினார்.

    இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டங்களும் நடந்தன. இந்த பரபரப்பு அடங்கி பல மாதங்கள் ஆகி இருக்கும் நிலையில் கமல், தனது சுற்றுப்பயணத்தின் போது மாணவி அனிதாவின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    திருச்சியில் ஏப்ரல் 4-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் இருக்கும் நிலையில் அதற்கு தேவையான ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு கமல் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும், உயர்மட்ட குழு உறுப்பினர்களும் பம்பரமாக சுழன்று பணி செய்து வருகிறார்கள்.

    மதுரையில் நடந்த கட்சி தொடக்க விழாவில் ஊழல் ஒழிப்பு, தரமான கல்வி உள்ளிட்டவையே கமலின் பேச்சிலே பிரதானமாக இருந்தது. இதனை மையப் படுத்தியே கமலின் அடுத்தடுத்த நகர்வுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தனது கட்சியின் இது போன்ற கொள்கைகளை தமிழகம் முழுவதும் கிராமம் கிராமமாக கொண்டு செல்லவும் கமல் திட்டமிட்டுள்ளார். தனது சுற்றுப் பயணத்தின் போது கிராமங்கள் தோறும் மக்கள் நீதி மய்யத்தின் கட்சி கொடியை ஏற்றி வைக்கவும் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அடித்தட்டு மக்கள் மத்தியிலும் தனது கட்சியையும், கொள்கைகளையும் கொண்டு செல்ல முடியும் என்பதே கமலின் வியூகமாக உள்ளது. #KamalHaasan #makkalneedhimaiam
    Next Story
    ×