search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கும்பகோணம் கோவிலில் தீ விபத்து: நகைகள்-பட்டுப்புடவைகள் எரிந்து நாசம்
    X

    கும்பகோணம் கோவிலில் தீ விபத்து: நகைகள்-பட்டுப்புடவைகள் எரிந்து நாசம்

    கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. தீயில் சாமிக்கு அணிவிக்க கூடிய நகைகள், பட்டுப்புடவைகள் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து சேதமாயின.
    கும்பகோணம்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பழமையும் பெருமையும், கட்டிட கலைக்கு சான்றாகவும் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதேபோல் அடுத்தடுத்து தமிழக கோவில்களில் தீ விபத்து ஏற்பட்டது. திருவாரூர், கும்பகோணம் உள்ளிட்ட கோவில்களில் ஏற்பட்ட தீவிபத்தால் பக்தர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

    இதனால் நாட்டில் ஏதும் பெரும் கலவரம், இயற்கை பேரிடர், ஆட்சி மாற்றம், தலைவர்கள் உயிருக்கு பங்கம் ஏற்படுமோ என்ற கேள்வி தமிழக மக்களிடையே நிலவி வருகிறது. இதனால் பெண்கள் பலர் வீட்டு வாசல்களில் விளக்கேற்றியும் குல தெய்வ கோவில்களுக்கு சென்று குடும்பத்தினருக்கு பரிகார பூஜைகளையும் செய்தனர்.

    இந்நிலையில் தற்போது மாசிமகத் திருவிழா கும்பகோணம் பகுதி சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. மகாமகம் தொடர்புடைய ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் கடந்த 13-ந்தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது

    இந்நிலையில் மகாமகம் திருவிழா தொடர்புடைய கோவில்களில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பகோணம் அருகே சத்திரம் கருப்பூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான கோவிலாகும்.


    இந்த கோவிலில் சுந்தரேசன் என்பவர் குருக்களாக இருந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை கோவிலுக்கு வந்த அவர் சுவாமிக்கு நித்ய பூஜைகளை நடத்தினார். பின்னர் மதியம் 12 மணியளவில் கருவறையில் பூஜைகளை முடித்து விட்டு திரும்பியபோது அருகில் இருந்த எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கு சரிந்தது. அதில் எண்ணைத்திரி கருவறையில் சுவாமியின் சிலையில் உடுத்தப்பட்டிருந்த ஆடையில் பற்றி எரியத் தொடங்கியது.

    இதைக்கண்டு பதறிய குருக்கள் வெளியில் ஓடிவந்து தண்ணீர் எடுத்து வர ஓடினார். அவர் வருவதற்குள் தீ மளமளவென பற்றியது. அது கருவறையில் திறந்திருந்த பீரோவில் அம்மனுக்கு சாத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டுப்புடவைகளிலும் பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது.


    இதனால் அச்சமடைந்த குருக்கள் சுந்தரேசன் தீ விபத்து பற்றி கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்களிடம் சென்று தெரிவித்தார். அவர்கள் உடனடியாக கும்பகோணம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் நிலைய தீயணைப்பு அலுவலர் முத்துக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி மேலும் தீ பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த அம்மனுக்கு சாத்தப்படும் பட்டுப்புடவைகள், வேட்டிகள், நகைகள் மற்றும் திருவாட்சி, பித்தளை பொருட்களான கற்பூர தாம்பாளங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது. சேத மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. #tamilnews
    Next Story
    ×