search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    கமலுக்கு தோள் கொடுக்கும் 16 முக்கிய நிர்வாகிகள் விவரம்
    X

    கமலுக்கு தோள் கொடுக்கும் 16 முக்கிய நிர்வாகிகள் விவரம்

    அரசியல் களத்தில் கால் பதித்துள்ள கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடக்க விழா மேடையில் 16 உயர் மட்ட குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    சென்னை:

    அரசியல் களத்தில் கால் பதித்துள்ள கமல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொடக்க விழா மேடையில் 16 உயர் மட்ட குழு உறுப்பினர்களை நியமித்தார். அவர்கள் கமலுடன் கைகோர்த்த பின்னணி என்பதை பற்றி பார்ப்போம்.

    கு.ஞானசம்பந்தன்:- மதுரையை மையமாக வைத்து விருமாண்டி படத்தை கமல் எடுத்த போது, மதுரை வட்டார பேச்சு தமிழை கற்றுக் கொடுத்தவர் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

    இதன்பின்னர் மதுரை தியாகராஜர் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியரான ஞானசம்பந்தனுடன் கமல்ஹாசனுக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஞானசம்பந்தன் கமலுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். மேலும் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது அவருடன் கமல் கலந்து ஆலோசிப்பார். நட்பின் அடிப்படையில் தற்போது அவருக்கு கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினர் பதவியை கமல் வழங்கி உள்ளார்.


    ஸ்ரீபிரியா:- கமலுடன் பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஸ்ரீபிரியா, எப்போதும் அவருடன் நட்பாகவே இருந்து வந்துள்ளார். இளமை ஊஞ்சலாடுகிறது, எனக்குள் ஒருவன், வாழ்வே மாயம், நீயா, சிம்லா ஸ்பெ‌ஷல் உள்ளிட்ட பல படங்கள் கமல், ஸ்ரீபிரியா இருவரும் ஜோடியாக நடித்து வெற்றி கண்ட திரைப்படங்களாகும். இப்படி சினிமாவில் கமலோடு இணைந்து பயணித்த ஸ்ரீபிரியா, அரசியல் பயணத்தையும் கமலுடனேயே தொடங்கி உள்ளார்.

    அந்த அடிப்படையிலேயே கமல் கட்சியில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார் ஸ்ரீபிரியா. இதனை தொடர்ந்து கட்சியில் உயர் மட்ட குழு உறுப்பினர் பதவியை கமல் வழங்கி உள்ளார்.

    ஐ.ஜி. மவுரியா:- ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி.யான மவுரியாவும் கமல் கட்சியின் பிரபலங்களில் முக்கியமானவர். சென்னை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியவர் மவுரியா. மயிலாப்பூர் துணை கமி‌ஷனராக பணியாற்றியுள்ள இவர், சிறைத்துறையில் ஐ.ஜி.யாக இருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பே விருப்ப ஓய்வு பெற்று சென்று விட்டார். போலீஸ் அதிகாரியாக இருக்கும் போதே அரசியல் ஆர்வம் கொண்டிருந்த மவுரியா, கமல் மூலமாக அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார். நண்பர்கள் சிலரின் ஆலோசனையின் பேரில் கமல் கட்சியில் இணைந்துள்ள இவரும் உயர் மட்ட குழு உறுப்பினராக கமலுக்கு தோள் கொடுக்க உள்ளார்.

    கமீலா நாசர்:- தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் நாசரும் ஒருவர். கமலின் பெரும்பாலான படங்களில் அவர் நடித்திருப்பார். நாசரை ஹீரோவாக்கி மகளிர் மட்டும் படத்தை எடுத்த கமல் அதில் நடிக்கவும் செய்தார். இப்படி திரை உலகில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் நாசருடன் கமல் நல்ல நட்புடனேயே இருந்தார். இது இருவரையும் தாண்டி குடும்ப உறவாகவும் இருந்து வந்தது. அந்த அடிப்படையிலேயே நாசரின் மனைவியான கமிலா நாசருக்கு கட்சியில் உயர்மட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    சுகா:- கமலின் நீண்ட நாள் நண்பரான சுகாவும் மக்கள் நீதி மய்யத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனரான இவர் சினிமா துறையில் 1995-ம் ஆண்டில் வெளியான சதிலீலாவதி படத்தில் இருந்தே கமலுடன் பணியாற்றி வருகிறார்.

    பாரதி கிருஷ்ணகுமார்:- எழுத்தாளரும், குறும்பட இயக்குனருமான இவரும் கமலின் நீண்ட நாள் நண்பர். கமலின் புதுக்கட்சியில் இவரும் முக்கிய நபராக உள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் கட்சி தொடக்க விழா மாநாட்டில் விழா நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    ராஜநாராயணன்:- பத்திரிகையாளரான ராஜநாராயணனும் கமலின் கட்சியில் உயர் மட்ட குழு உறுப்பினராக பணியமர்த்தப்பட்டுள்ளார். கமலின் அரசியல் பயணத்தை வடிவமைத்து கொடுப்பதில் இவர் முக்கிய பங்காற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவர்களோடு சேர்த்து உயர்மட்ட குழுவில் நியமிக்கப்பட்டுள்ள 16 பேரும் கமலின் புதிய பயணத்தில் தோளோடு தோள் கொடுக்கும் தளபதிகளாக பணியாற்ற உள்ளனர். #KamalHaassan #Tamilnews
    Next Story
    ×