search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்
    X

    கோவில்பட்டி தீப்பெட்டி குடோனில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்

    கோவில்பட்டி தீப்பெட்டி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தீயில் எரிந்து சாம்பலானது.
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி- இளையரசனேந்தல் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் ஒருபகுதியை ஐ.டி.சி. நிறுவனத்தினர் வாடகைக்கு எடுத்து தீப்பெட்டி பண்டல்களை சேமித்து வைக்கும் குடோனாக நடத்தி வந்தனர்.

    அங்கு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஏராளமான தீப்பெட்டி பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

    இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் குடோனில் இருந்த தீப்பெட்டி பண்டல்கள் முழுவதும் தீப்பற்றி எரிந்தன.

    பின்னர் பல மணி நேரம் போராடி தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த 32 ஆயிரம் தீப்பெட்டி பண்டல்கள் தீயில் எரிந்து சாம்பலானது. மேலும் குடோன் கட்டிடமும் சேதமடைந்தது. சேத மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வருவாய் ஆய்வாளர் அப்பனராஜ், கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மேலும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×