search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய அளவில் 2-வது இடம்: தமிழகத்தில் சரக்கு-சேவை வரி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூல்
    X

    இந்திய அளவில் 2-வது இடம்: தமிழகத்தில் சரக்கு-சேவை வரி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூல்

    தமிழகத்தில் சரக்கு- சேவை வரி(ஜி.எஸ்.டி.) இலக்கை தாண்டி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூலாகி உள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் சரக்கு- சேவை வரி(ஜி.எஸ்.டி.) இலக்கை தாண்டி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூலாகி உள்ளது.

    மத்திய அரசு ‘ஒரே தேசம், ஒரே வரி’ என்ற அடிப்படையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு-சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி அமல்படுத்தியது.

    இந்த வரி வருவாயில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுக்கும் பகிர்ந்துகொள்ளப்படுகிறது.

    இந்தநிலையில் ஜி.எஸ்.டி. மூலம் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தில் மத்திய அரசுக்கு ரூ.9.8 லட்சம் கோடி கிடைத்துள்ளது. 34 லட்சம் தொழில் முனைவோர்கள் புதிதாக இணைந்துள்ளனர். ஜி.எஸ்.டி. அதிகம் வசூலான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம் கிடைத்தது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் வணிக வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.19 ஆயிரத்து 355.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இதை விட ஜி.எஸ்.டி. குறைந்தால், அதனை மத்திய அரசு ஈடுகட்டும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் அறிவித்திருந்தது. இந்தநிலையில் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட ரூ.19 ஆயிரத்து 592.58 கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. இதன் மூலம் கூடுதலாக ரூ.237 கோடி கிடைத்து இருக்கிறது.

    தற்போது ஜி.எஸ்.டி. மூலம் மாதம் ரூ.3 ஆயிரத்து 222 கோடி வசூலாக வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 818 தொழில் முனைவோர்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்துள்ளனர். தொடர்ந்து பலர் ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்து வருகின்றனர்.

    ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டபோது தமிழக அரசுக்கு வரி வருவாயில் இழப்பு ஏற்படும் என்ற தோற்றம் இருந்தது. ஏனெனில், தமிழகத்தில் உற்பத்தி- தயாரிக்கப்படும் பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும்போது, அந்த மாநிலங்களுக்கு வரி வருவாய் சென்றடைந்துவிடும் என்று கருதப்பட்டது.

    தற்போது பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அதிகளவில் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருவதால், ஜி.எஸ்.டி. மூலம் கூடுதல் வரி வருவாய் கிடைத்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயை ஏற்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை மராட்டியம் (16 சதவீதம்), தமிழ்நாடு (10 சதவீதம்), கர்நாடகம் (9 சதவீதம்) பெற்று இருக்கிறது. லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது என்று பொருளாதார கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×