search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளர்மதி
    X
    வளர்மதி

    சேலம் மாணவி வளர்மதிக்கு ஐகோர்ட்டு நீதிபதி அறிவுரை

    படிக்கின்ற காலத்தில் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று சேலம் மாணவி வளர்மதிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் அறிவுரை வழங்கினார்.
    சென்னை:

    நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக மாணவர்கள் போராட வேண்டும் என்று அழைப்புவிடுத்த சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் படிப்பு இறுதியாண்டு மாணவி வளர்மதியை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். இதை எதிர்த்து அவரது தந்தை தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்தது.

    இதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியில் வந்தார். சிறையில் இருந்தபோது அவர் வகுப்புக்கு செல்லாததால், அந்த நாட்கள் விடுப்பு காலமாக கருதப்பட்டது. போதிய வருகை இல்லாததால் வளர்மதியை ‘செமஸ்டர்’ தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு உத்தரவின்படி அவர் ‘செமஸ்டர்’ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

    இந்த நிலையில், போதிய வருகை இல்லாததால் கூடுதலாக 6 மாதங்கள் படிக்க வேண்டும் என்று வளர்மதிக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வளர்மதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வளர்மதி கோர்ட்டில் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதி, ‘மாணவர்களை சில இயக்கங்கள் தவறாக வழிநடத்தும். படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். படிப்பை முடித்துவிட்டு இதுபோன்ற போராட்டங்களில் கலந்துகொள்ளலாம்’ என்று அறிவுரை கூறினார்.

    பின்னர் வளர்மதி தொடர்ந்த வழக்கிற்கு சேலம் பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 13-ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

    Next Story
    ×