search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழா: 17 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கினார் கவர்னர்
    X

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. பட்டமளிப்பு விழா: 17 ஆயிரம் பேருக்கு பட்டம் வழங்கினார் கவர்னர்

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 67 வயது பெண் உள்பட 17 ஆயிரம் மாணவர்-மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம்-பட்டயங்களை வழங்கினார்.
    சென்னை:

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி 16 ஆயிரத்து 897 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பட்டயங்கள் வழங்கினார்.

    அதாவது 4 ஆயிரத்து 581 பேர்களுக்கு முதுநிலை பட்டங்களும், 8 ஆயிரத்து 497 பேர்களுக்கு இளநிலை பட்டங்களும், 3 ஆயிரத்து 701 பேர்களுக்கு பட்டயங்களும், 100 பேர்களுக்கு முதுநிலை பட்டயங்களும் வழங்கினார்.

    இவர்களில் 209 மாணவ-மாணவிகள் பல்கலைக்கழக அளவில் முதல் இடம் பெற்றதற்காக தங்கப்பதக்கங்களை பெற்றனர். 353 பேர் பல்கலைக்கழக அளவில் 2-வது, 3-வது இடத்தை பெற்று சான்றிதழ்கள் பெற்றனர். கனடாவில் வான்கூவரில் அமைந்துள்ள காமன்வெல்த் கல்வி கழகத்தின் ஆசியாவுக்கான காமன்வெல்த் கல்வி ஊடக மையம், தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப பாடத்தில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவருக்கு விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விருது வீரலட்சுமி என்ற மாணவிக்கு வழங்கப்பட்டது. மேலும் அந்த மாணவிக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டது.

    பட்டம் பெற்ற மாணவிகளில் செல்லத்தாய் என்பவருக்கு வயது 67 வயதாகிறது. அவர் விழா மேடையில் கவர்னரிடம் பட்டம் பெற்றபோது கவர்னர் வாழ்த்தினார்.

    அந்த பெண் பட்டம் பெற்றுவிட்டு விழா மேடையை விட்டு கீழே படியில் இறங்கி வந்தபோது அவரை மெதுவாக சிலர் பிடித்து அழைத்து வந்து ஒரு இருக்கையில் உட்காரவைத்தனர்.

    உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசும்போது கூறியதாவது:-

    தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதா? என்று வினா எழுப்புகிறார்கள். உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். முறையாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்று தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் படித்து பெறப்படும் அனைத்து பட்டங்களும் வேலைவாய்ப்பிற்கும் பணி உயர்வுக்கும் ஏற்புடையதாகும். இது குறித்து அரசாணை உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

    மத்திய அரசின் வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் துணை தலைமை இயக்குனர் கே.அழகுசுந்தரம் பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். முதன்மை செயலாளர் சுனில் பாலிவால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    தொடக்கத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு.பாஸ்கரன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
    Next Story
    ×