search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்: தங்க தமிழ்ச்செல்வன்
    X

    இரட்டை இலை சின்னத்தை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் இன்று மனு தாக்கல்: தங்க தமிழ்ச்செல்வன்

    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்டம் அருமனையில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டு நடைபெறும் அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக டி.டி.வி. தினகரன் கலந்து கொள்கிறார். இது தொடர்பான ஆலோசனை கூட்டம் அருமனையில் நேற்று நடந்தது.

    இதில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், மாரியப்பன், ரெங்கசாமி, வெற்றிவேல், நாஞ்சில் சம்பத் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின்பு தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இரட்டை இலை சின்னத்தை முடக்கியது மூலம் தேர்தல் கமி‌ஷன் அ.தி.மு.க. அம்மா அணிக்கு சதி செய்து விட்டது. தேர்தல் கமி‌ஷனில் சின்னம் தொடர்பான விசாரணை தொடங்கிய போது எங்கள் அணி சார்பில் 111 எம்.எல்.ஏ.க்கள், 32 எம்.பி.க்கள் பட்டியலை அளித்தோம். ஆனால் தேர்தல் கமி‌ஷன் அப்போது எங்களின் விளக்கத்தை ஏற்கவில்லை. அதனை கால தாமதப்படுத்தி இப்போது அதே எண்ணிக்கையிலான உறுப்பினர்களை வைத்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இது ஒருதலைபட்சமான தீர்ப்பாகும்.

    இது பாரதிய ஜனதா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை. இதனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். முறையான விசாரணை இல்லாமல் தேர்தல் கமி‌ஷன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவோம்.


    இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். இதில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

    ஆர்.கே. நகரில் எந்த காரணமும் இன்றி இதற்கு முன்பு இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை டி.டி.வி. தினகரன் பெங்களூர் சென்று சசிகலாவை சந்திக்கிறார்.

    அதன்பின்பு 29-ந்தேதி எங்களின் ஆட்சிமன்ற குழு கூட்டம் நடக்கிறது. இதில் ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். ஆர்.கே.நகரில் நாங்கள் யாரை நிறுத்தினாலும் அவர் தான் வெற்றி பெறுவார்.

    தமிழகத்தின் இடைக்கால முதல்-அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் 150 நாட்கள் பதவியில் இருந்தார். அப்போது ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறவில்லை. அவர் பதவியில் இருந்து இறங்கிய பின்பு தான் அவருக்கு ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக விசாரிக்க இருக்கும் நீதிபதிக்கு, இருக்கை அளிப்பதற்கே 2 மாதங்கள் ஆகி விட்டது. வழக்கை இழுத்தடித்து கால தாமதப்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம்.

    சசிகலாவுக்கு எதிரான ஆவணங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். சசிகலாவை சிக்க வைக்கும் ஆவணங்கள் எதுவும் கிடைக்காது. இதில் அவர்கள் தோற்றுப்போவார்கள்.

    விசாரணை ஆணையத்தின் அதிகார வரம்பை அதிகரிக்க வேண்டும் என்று நீதிபதி கடிதம் எழுதியும், அதற்கான எந்த நடவடிக்கையையும் இந்த அரசு செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×