search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    திருவண்ணாமலையில் ஆந்திர வியாபாரி கொலையில் ஒரு மாதத்துக்கு பின் மாணவர் கைது
    X

    திருவண்ணாமலையில் ஆந்திர வியாபாரி கொலையில் ஒரு மாதத்துக்கு பின் மாணவர் கைது

    திருவண்ணாமலையில் கடந்த மாதம் நடந்த ஆந்திர வெங்காய வியாபாரி கொலையில் ஐ.டி.ஐ. மாணவர் கைது செய்யபட்டார்.

    திருவண்ணாமலை:

    ஆந்திர மாநிலம் மாடிட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதுலேபிக் (வயது 58), வெங்காய வியாபாரி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெங்காயம் வியாபாரம் தொடர்பாக வேலூரில் ரூ.2 லட்சம் வசூல் செய்துவிட்டு, திருவண்ணாமலையில் உள்ள வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்வதற்காக சென்றார்.

    பின்னர் அவர் ஊருக்கு செல்லவில்லை. இதுகுறித்து அவருடைய மகன் மதன்குமார் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த குமார் (31), இம்தியாஸ் (24), சையது (25) ஆகிய 3 பேர் சேர்ந்து பணத்துக்காக மதுலேபிக்கை கொலை செய்து பிணத்தை எரித்தது தெரியவந்தது.

    அவர்கள் 3 பேரையும் பிடித்து நடத்தி விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

    பிடிபட்டவர்களில் குமார், திருவண்ணாமலை மண்டி தெருவில் வெங்காய மண்டி வைத்துள்ளார். இவர், ஆந்திர வியாபாரி மது லேபிக்கிடம் மட்டுமே வெங்காய லோடை மொத்தமாக விலைக்கு வாங்குவார்.

    மதுலேபிக், வேலூர், திருவண்ணாமலையில் பெரும்பாலான வெங்காய மண்டிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு வெங்காய இறக்குமதி செய்யும் பெரிய வியாபாரி.

    மதுலேபிக்கிடம் வெங்காயம் வாங்கிய குமார், ரூ.12 லட்சம் பாக்கி வைத்துள்ளார். சம்பவம் நடந்த கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் வந்துவிட்டு திருவண்ணாமலை சென்ற மதுலேபிக், குமாரை அன்று இரவு சந்தித்து பாக்கியை கேட்டுள்ளார்.

    குமார், 4 லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். மீதித் தொகையை பிறகு தருவதாக கூறியுள்ளார். குமார் கொடுத்த பணத்துடன் வேலூரில் வசூல் செய்த ரூ.2 லட்சத்துடன் சேர்த்து, மொத்தம் ரூ.6 லட்சம் பணத்தை மதுலேபிக் கையில் வைத்திருந்தார்.

    அந்த பணத்தை குமாரிடம் கொடுத்து, வைத்துக்கொள் மறுநாள் காலை ஊருக்கு செல்லும் போது, திரும்ப பெற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு தனது காரிலேயே ஆந்திரா அழைத்துச் செல்வதாக குமார் கூறினார்.

    நடுவழியில், ஆந்திர வியாபாரியை கொன்று பணத்தை பறிக்க குமார் திட்டமிட்டிருந்தார். இதை அறியாத, வியாபாரி மது லேபிக் அன்றிரவு அவருடன் காரில் புறப்பட்டார்.

    காரை, குமாரின் டிரைவர் சையது அலி ஓட்டினார். இவர்களுடன் குமாரின் ‘ஆக்டிங்’ டிரைவரான இம்தியாஸ் என்பவரும் உடன் சென்றார். சித்தூர் அடுத்த மதனப் பள்ளியில் சென்றபோது, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் குமார் காரை நிறுத்த செய்தார். காரை எதற்கு இங்கு நிறுத்துகிறீர்கள் என்று மதுலேபிக் கேட்டதற்கு சிறுநீர் கழிக்க என்று பதில் அளித்துள்ளனர்.

    மதுலேபிக்கும் காரில் இருந்து கீழே இறங்கி சிறுநீர் கழித்து கொண்டிருந்தபோது, பின்பக்கத்தில் இருந்து குமார் ஒரு துணியால் மதுலேபிக் கழுத்தை சுற்றி இறுக்கி நெரித்தார். டிரைவர்கள், சையது அலி மற்றும் இம்தியாஸ் ஆகிய 2 பேரும், வியாபாரியை சரமாரியாக தாக்கினர்.

    கொடூரமாக கொன்று காட்டு பகுதியில் உடலை எரித்துள்ளனர்.

    இதையடுத்து, மதுலேபிக் வைத்திருந்த ரூ.6 லட்சம் பணத்தையும் குமார் எடுத்துக் கொண்டார். கொலைக்கு உடந்தையாக இருந்த தனது டிரைவர்கள் 2 பேருக்கும், அந்த பணத்தில் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாய் பிரித்துக் கொடுத்தார்.

    மதனப்பள்ளியில் இருந்து 3 பேரும், திருவண்ணாமலைக்கு காரில் திரும்பினர். ஒன்றும் தெரியாததை போல இருந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் 3 பேரும் போலீசில் சிக்கி கொண்டனர்.

    இந்த நிலையில் வியாபாரி வேங்கிகால இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் மகன் பிரவீன்குமார் (வயது21) ஐ.டி.ஐ. மாணவர். வியாபாரி உடலை எரிக்க உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.

    ஒரு மாதத்துக்கு பின்னர் இன்று பிரவீன்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×