search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தெற்கு அந்தமானில் தாழ்வுநிலை நீடிப்பு: தென் மாவட்ட கடலோர பகுதியில் மழை நீடிக்கும்
    X

    தெற்கு அந்தமானில் தாழ்வுநிலை நீடிப்பு: தென் மாவட்ட கடலோர பகுதியில் மழை நீடிக்கும்

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்ட கடலோர பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    கடந்த ஒரு வாரமாக வெளுத்துகட்டிய வடகிழக்கு பருவ மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

    மேல்அடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்தது. பின்னர் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. வட மாவட்டங்கள் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் நேற்று முதல் படிப்படியாக மழை குறைந்தது. நேற்று பகலில் பலத்த மழை கொட்டினாலும் மாலை நேரத்திற்கு பிறகு மழை பெய்யவில்லை. குளிர்ந்த காற்று கடுமையாக வீசியது. இதனால் வீடுகளில் மக்கள் முடங்கினார்கள்.

    இன்று காலையில் சூரிய வெளிச்சம் காணப்பட்டது. ஒரு வாரத்திற்கு பிறகு சென்னையில் சூரியன் தலைகாட்டியுள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-

    தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் மாவட்ட கடலோர பகுதியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



    வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்யும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்துறைப்பூண்டியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. நாகப்பட்டினம் 7 செ.மீ., செங்குன்றம், மகாபலிபுரம் தலா 6 செ.மீ., கோவளம் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×