search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காப்பக விடுதியில் பெண் குழந்தைகள் துன்புறுத்தல்: திருச்சி பாதிரியார் கைது
    X

    காப்பக விடுதியில் பெண் குழந்தைகள் துன்புறுத்தல்: திருச்சி பாதிரியார் கைது

    பெண் குழந்தைகளை துன்புறுத்தியதாக வந்த புகாரையடுத்து திருச்சி காப்பக நிர்வாகி பாதிரியாரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    திருச்சி:

    திருச்சி சுப்பிரமணியபுரத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இதனை பாதிரியார் கிதியோன் ஜேக்கப் என்பவர் நடத்தி வந்தார். இங்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கைவிடப்பட்ட பெண் குழந்தைகள் வளர்க்கப்பட்டு வந்தனர்.

    இந்த காப்பகத்தில் உள்ள 89 பெண் குழந்தைகளுக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் கொடுக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு 8-ந்தேதி ஆய்வு செய்தனர்.

    இதில் குழந்தைகள் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதோடு ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் அரசின் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காப்பகத்தின் நிர்வாகியான பாதிரியார் கிதியோன் ஜேக்கப் மீது திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே இக்காப்பகம் சட்டவிரோதமாக நடத்தப்படுவதாக கூறி மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் பாடம் நாராயணன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் நீதிபதி தீப்தி அறிவுநிதி தலைமையிலான குழுவினர் காப்பகத்தில் ஆய்வு செய்து, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதனிடையே காப்பகத்தில் தங்கியிருக்கும் சிறுமிகள் தங்களின் குழந்தைகள் என்றும், அவர்களை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உரிமை கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த சிலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வேண்டுகோள் விடுத்தனர்.

    நீதிமன்ற உத்தரவின் பேரில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கும், அவர்களை உரிமை கொண்டாடியவர்களுக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டது. மேலும் காப்பகத்தின் நிர்வாகம் மாவட்ட கலெக்டரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

    சி.பி.ஐ. விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டதின் பேரில், இந்திய தண்டனை சட்டம் 120(பி), 361, 368, 201, 340, 370 உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் இளைஞர் நீதி சட்டத்தின் கீழ் காப்பகத்தின் இயக்குனர் கிதியோன் ஜேக்கப் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

    வெளிநாடு சென்ற கிதியோன் ஜேக்கப் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என 3-க்கும் மேற்பட்ட முறை சி.பி.ஐ. சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதனால் அவர் தேடப்படும் குற்றவாளி என அறிவித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த கிதி யோன் ஜேக்கப்பை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய் தனர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் திருச்சி தலைமை குற்றவியல் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து கிதியோன் ஜேக்கப் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    Next Story
    ×