search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    காவல்துறை- கந்துவட்டிக்காரர்கள் உறவை முறிக்க வேண்டும்: முத்தரசன்
    X

    காவல்துறை- கந்துவட்டிக்காரர்கள் உறவை முறிக்க வேண்டும்: முத்தரசன்

    காவல்துறைக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும் உள்ள உறவை முறிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
    திருச்சி:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி கொடுமையால் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம், மிக மிக கொடூரமானது. ஜெயலலிதா இருந்த போது கந்து வட்டி கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் தற்போது தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்சனை அதிகரித்து உள்ளது. ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைக்கு பணம் தேவைப்படுகிறது. கடன் வாங்க முடியாததால் கந்துவட்டியை நம்புகிறார்கள். கந்துவட்டிக்காரர்கள் இதனை பயன்படுத்திக் கொண்டு வசூல் செய்கிறார்கள். இதற்கு காவல் துறையும் உடந்தையாக உள்ளது.

    கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. மாவட்ட கலெக்டர் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்துவட்டி தடைச்சட்டத்தை மீண்டும் கடைபிடிக்க வேண்டும். காவல்துறைக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும் உள்ள உறவை முறிக்க வேண்டும்.


    பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டிருந்தாலும், பணம் இல்லாததால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சென்ற ஆண்டு வாங்கிய கடனை ரத்து செய்து புது கடன்களை கொடுக்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன்மாதிரியாக இருந்தது தமிழகம். இங்கு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நீதிமன்றத் தடையினால் பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாடு முழுவதும் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகரிக்கிறது. அதனை கண்டித்தும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நாடு முழுவதிலும் அமல்படுத்தக் கோரியும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வரும் டிசம்பர் 6-ந்தேதி இந்தியா முழுவதிலும் விவசாய சங்கம் சார்பாக போராட்டம் நடத்தப்படும்.

    டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் பொது மக்களுக்கு அபராதம் விதிக்கும் முறையை தவிர்த்து, மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×