search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்
    X

    போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 85 ஆயிரம் பேருக்கு நோட்டீஸ்

    போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    7-வது ஊதிய குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந்தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் 60 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் தங்களது போராட்டத்தை அக்டோபர் 15-ந்தேதி வரை ஒத்திவைத்தனர்.

    இதனால் ஜாக்டோ ஜியோ சங்கம் 2 ஆக உடைந்தது. இதில் 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம்- மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களது போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்திருந்தாலும் தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.

    உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தலைமை செயலாளர் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனாலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் நேற்று எடுத்த கணக்கெடுப்பு படி 43 ஆயிரத்து 450 ஆசிரியர்கள், 41 ஆயிரத்து 550 அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப அனைத்து துறை அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்து அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில் போராட்டத்தில் ஈடுபட்டால் நோட்டீஸ் அனுப்புவதும் சம்பளத்தை நிறுத்துவதும் அரசு எடுக்கும் வழக்கமான நடைமுறைதான். நாங்கள் அதை எதிர் கொண்டு எங்கள் கோரிக்கை நிறைவேற போராடுகிறோம்.

    எங்கள் கணக்குப்படி 3 லட்சம் ஆசிரியர்களும், 2 லட்சம் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பலரை கணக்கில் சேர்க்காமல் உள்ளது.

    உதாரணத்திற்கு பஞ்சாயத்து செயலாளர்கள் 12524 பேர் போராட்டத்தில் தான் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. மாதத்திற்கு ஒரு முறைதான் டைரி கொடுப்பார்கள். ஆனால் இவர்களை போராட்ட கணக்கில் சேர்ப்பதிலை. இதேபோல் பல துறைகள் உள்ளன.

    எங்களை பொறுத்தவரை எந்தவித நடவடிக்கை மேற்கொண்டாலும் அதை எதிர்கொள்ள தயார். எங்கள் உரிமைகளை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×