search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மெரினாவில் 3-வது நாளாக தடை நீடிப்பு: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு ‘சீல்’
    X

    மெரினாவில் 3-வது நாளாக தடை நீடிப்பு: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு ‘சீல்’

    ஐகோர்ட்டு அருகில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக மாணவர்களும், வக்கீல்கள் சிலரும் ஊர்வலமாக மெரினாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதையடுத்து ரிசர்வ் வங்கி வழிப்பாதை சீல் வைக்கப்பட்டது.
    சென்னை:

    நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் அதில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையிலும் மாணவர்கள் கல்லூரிக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் கலைக் கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இப்படி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மெரினா கடற்கரையில் கூடி விடக்கூடாது என்பதற்காக அங்கு பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக இந்த தடை இன்றும் நீடிக்கிறது.

    இந்த நிலையில் இன்று காலையில் ஐகோர்ட்டு அருகில் உள்ள ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வழியாக மாணவர்களும், வக்கீல்கள் சிலரும் ஊர்வலமாக மெரினாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியது. இதனையடுத்து பாரிமுனையில் இருந்து மெரினா செல்லக்கூடிய ரிசர்வ் வங்கி வழிப்பாதை சீல் வைக்கப்பட்டது.

    அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு இரும்பு தடுப்பு கம்பிகளை அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது அடையாள அட்டையை காட்டி சுரங்க பாதை வழியாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். ஆனால் போலீசார் இதற்கு அனுமதிக்கவில்லை.

    இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் கோட்டை முன்புறமுள்ள சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

    Next Story
    ×