search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்கள் திட்டியதால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
    X

    ஆசிரியர்கள் திட்டியதால் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

    ஆசிரியர்கள் திட்டியதால் பிளஸ்-1 மாணவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பூர்:

    சென்னையை அடுத்த மாதவரம் வாத்தியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி. இவருடைய மனைவி அம்மு. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் 2-வது மகன் சக்திவேல் (வயது 16).

    இவர், கொடுங்கையூர் பகுதியில் உள்ள தனது பாட்டி சரோஜா வீட்டில் தங்கி, பெரம்பூரில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

    சக்திவேல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தார். பின்னர் சிறப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்தார்.

    நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த சக்திவேல், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சரோஜா, பேரன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொடுங்கையூர் போலீசார், சக்திவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறப்பு தேர்வில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சக்திவேல் குறைந்த மதிப்பெண் பெற்று இருப்பதாக கூறி அவரை பிளஸ்-1 வகுப்பில் சேர்க்க பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன் மறுத்து விட்டதாகவும், இதையடுத்து பள்ளி தலைமை நிர்வாகி சிபாரிசின் பேரில் அவர் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்ததாகவும் தெரிகிறது.

    இதை ஏற்றுக்கொள்ள முடியாத புருஷோத்தமன் மற்றும் ஆங்கில ஆசிரியர் கனகராஜ் ஆகியோர் சக்திவேலை தரக்குறைவாக பேசியதோடு, தினமும் வகுப்பறையில் சக மாணவர்கள் மத்தியில் அவரை திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதுபற்றி சக்திவேல் தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். அதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் மனம் உடைந்த அவர், தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    இதற்கிடையே போலீசார், சக்திவேல் கைப்பட எழுதிய உருக்கமான கடிதத்தை அவரது பாட்டி வீட்டில் இருந்து கைப்பற்றினர். அதில் அவர், தனது சாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புருஷோத்தமன், ஆசிரியர் கனகராஜ் ஆகியோர்தான் காரணம். தான் படிக்க கூடாது என்பதற்காக தனக்கு பிடிக்காத பிரிவை கொடுத்துவிட்டதாக எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    கடிதத்தின் ஒரு பகுதியில், “அம்மா என்னை நினைத்து தினம் தினம் அழாதே. ஒரு நாள் மட்டும் அழுதுகொள். தங்கையை நன்றாக பார்த்துக்கொள். நீயும், அப்பாவும் சேர்ந்து இருங்க. இதுதான் என்னோட கடைசி வார்த்தை” என தனது தாயாருக்கு உருக்கமாக எழுதி இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை கைது செய்யக்கோரி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சியாமளாதேவி மற்றும் பெரம்பூர் தாசில்தார் நிலா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×