search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி
    X

    உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி

    உளுந்தூர்பேட்டை அருகே 9 ஆண்டுகளுக்கு பிறகு எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    உளுந்தூர்பேட்டை:

    உளுந்தூர்பேட்டை அடுத்த எறையூரில் இங்கு புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 30-ந் தேதி ஆடம்பர தேர்பவனி நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் தேரோட்டம் சுமூகமாக நடைபெற தொடர்ந்து இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் தீர்வு எட்டப்படவில்லை .

    அதேபோல் இந்த ஆண்டும் இருதரப்பினரிடையே பேச்சுவார்தை நடைபெற்றது. அப்போது வீதிகளில் தேர்பவனி வர இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்து திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதையடுத்து 9 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு இதையொட்டி கொடி ஏற்றப்பட்டது. நேற்று காலையில் ஆலய வளாகத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. நேற்றிரவு தேர்பவனி நடைபெற்றது. பங்குதந்தை ஆல்பர்ட் தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் 4 தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவில் வளாகத்தை அடைந்தது.

    நிகழ்ச்சியில் எறையூர், பாளையம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபமாலை அன்னையை வணங்கினர்.

    தேர்திருவிழாவையொட்டி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    Next Story
    ×