search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை தூர் வாரும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்
    X

    மேட்டூர் அணை தூர் வாரும் பணி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்

    83 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை தூர் வாரும் பணி நாளை மறுநாள் (28-ந் தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    சேலம்:

    மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.

    கடந்த 83 ஆண்டுகளில் இது வரை மேட்டூர் அணை தூர் வாரப்படவில்லை. வெள்ளப்பெருக்கு மற்றும் மழை காரணமாக சுமார் 20 சதவீத அளவுக்கு சகதி படிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

    இதனால் மேட்டூர் அணையில் முழுக்கொள்ளளவில் தண்ணீரை சேமிக்க முடியவில்லை. வாப்காஸ் நிறுவனம் மூலம் வண்டல் மண் படிந்துள்ள இடங்கள் எவ்வளவு என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அவற்றை அப்புறப்படுத்தும் முறைகளும் ஆலோசிக்கப்பட்டன.

    விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் கிராவல் மண்ணை பொதுமக்களுக்கு இலவசமாக வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 டிராக்டரும், மண்பாண்டம் செய்வோருக்கு 20 டிராக்டர்களும், கிராவல் மண் நபருக்கு 10 டிராக்டரும் அள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    முதல் கட்டமாக சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையின் வலது கரையில் பண்ணவாடி , மூலக்காடு பகுதிகளிலும் இடது கரையில் கூணாண்டியூர், கீரைக்காரனூர் பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டம் நாகமரை கிராமத்தில் ஆசாரி கிணற்றுப்பள்ளம், சித்தையன் கோவில் ஏரி பகுதிகளிலும் மேட்டூர் நீர் தேக்கத்தில் படிந்துள்ள வண்டல் மண்ணை அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் மேட்டூர் அணை தூர் வாரும் பணி மற்றும் விவசாயிகள் வண்டல் மண் எடுக்கும் பணிகளையும் நாளை மறுநாள் (28-ந் தேதி) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதனால் இனி வரும் நாட்களில் அணையில் கூடுதல் தண்ணீர் தேக்க முடியும். மேலும் தென் மேற்கு பருவ மழை அடுத்த மாதத்தில் தொடங்கும் என்பதால் அதிக அளவில் மேட்டூர் தண்ணீர் தேக்கி வைக்க முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே நேற்று மேட்டூர் அணைக்கு சென்ற மாவட்ட கலெக்டர் சம்பத் வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், எந்த பகுதிகளில் இருந்து முதலில் வண்டல் மண் எடுப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

    அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வண்டல் மண் எடுக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் இடம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்து துறை அதிகாரிகளுடன் கலெக்டர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலெக்டர் சம்பத் கூறுகையில், மேட்டூர் அணையில் வண்டல் மண் எடுக்க இது வரை 642 விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலித்து அனுமதி ஆணை வழங்க கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    Next Story
    ×