search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் லைசென்சு ரத்து: அரசு உத்தரவு
    X

    போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் லைசென்சு ரத்து: அரசு உத்தரவு

    சாலை விபத்து - உயிர் இழப்புகளை குறைக்கும் நடவடிக்கையாக, போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் லைசென்சை ரத்து செய்யுமாறு போக்குவரத்து போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டில் 73,431 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. அதில், 17,218 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக அரசு எடுத்துள்ள பல்வேறு சிறந்த முன் முயற்சிகள் மற்றும் விபத்திற்கு பிந்தைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பின்னரும் 2017-ம் ஆண்டில் (மார்ச் 2017 வரை) நிகழ்ந்த 16,756 சாலை விபத்துகளில் 4,148 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பெரும்பாலான சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு சாலை விதிகளை பின்பற்றாததே முக்கிய காரணம் ஆகும். மோட்டார் வாகனச்சட்டம் 1988, பிரிவு 19 மற்றும் அது தொடர்பான மத்திய மோட்டார் வாகன விதி 1989, விதி 21-ன்படி வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், சிவப்பு விளக்கை தாண்டுதல், சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றுதல், குடிபோதையில் வாகனங்களை இயக்குதல், சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல் மற்றும் வாகனங்களை இயக்கும்போது செல்போன் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை (டிரைவிங் லைசென்சு) தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தகுதியிழப்பு செய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    சாலை பாதுகாப்பு குறித்த சுப்ரீம் கோர்ட்டு குழுவும் மேற்கூறிய போக்குவரத்து விதி மீறல்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தகுதியிழப்பு செய்ய வலியுறுத்தி வருகிறது.



    அதனைத்தொடர்ந்து போக்குவரத்து மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு மேற்கூறிய போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஓட்டுனர் உரிமங்களை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தகுதியிழப்பு செய்ய தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கூறிய போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த தகவல்களை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அனுப்பிவைத்து உரிய விதிமுறைகளைப் பின்பற்றி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஓட்டுனர் உரிமங்களை தகுதியிழப்பு செய்ய காவல்துறை அதிகாரிகள் கோரப்பட்டுள்ளார்கள்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து சாலை உபயோகிப்பாளர்களும் உரிய போக்குவரத்து விதிகளை பின்பற்றி சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் குறைத்திட உதவிடுமாறு கோரப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×