என் மலர்

  செய்திகள்

  கல்வி சீர்திருத்தம் நல்ல தொடக்கம்: ராமதாஸ் அறிக்கை
  X

  கல்வி சீர்திருத்தம் நல்ல தொடக்கம்: ராமதாஸ் அறிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக அரசு பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என்றும் இதுபோன்று ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்ட தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, அடுத்தக்கட்டமாக பாடத் திட்டங்கள், மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட மேலும் பல சீர்திருத்தங்களை அறிவித்திருக்கிறது.

  பள்ளிக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனாலும், தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையில் சீரழிவுகள் வெறும் புண்ணாக மட்டும் இல்லாமல் புரையோடிப் போயிருப்பதால், அதை சரி செய்ய இன்னும் ஏராளமான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டியுள்ளது.

  மேல்நிலை வகுப்புகளான பதினோறாம் வகுப்புக்கும், பனிரெண்டாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும்; பதினொன்றாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைந்தாலும் 12-ம் வகுப்புக்கு முன்னேறலாம்; தேர்ச்சி பெறாத பாடத்தை 12-ம் வகுப்பில் எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையாகவே கல்வித் தரத்தை உயர்த்தவும், 12-ம் வகுப்பில் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பதினோறாம் வகுப்பில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்காமல் நிறுத்தி வைப்பதை தடுக்கவும் பெரிதும் உதவும்.  அதுமட்டுமின்றி, மேல்நிலை வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்குமான மொத்த மதிப்பெண்கள் 200-லிருந்து 100 ஆக குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் திறனை சரியாக மதிப்பிடுவதற்கு இந்த மாற்றம் மட்டுமே போதுமானதல்ல. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பிடும் முறையில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

  மாணவர்களுக்கு ஸ்மார்ட் அட்டைகளை வழங்குவதில் தொடங்கி, பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது வரை அனைத்து யோசனைகளும் பாட்டாளி மக்கள் கட்சியால் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டவை தான். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மேற்கண்ட திட்டங்கள் உட்பட மொத்தம் 23 வகையான திட்டங்கள் தமிழக மக்களுக்கு வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன. தமிழக மக்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் கருதி பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த திட்டங்கள் இப்போது செயல்வடிவம் பெறுவதில் நான் மகிழ்ச்சி மட்டுமின்றி பெருமிதமும் அடைகிறேன்.

  அதேநேரத்தில் கல்வி கோபுரத்தில் மேல்மட்டத்தில் அதிக வி‌ஷயங்களை சேர்க்கும் போது அவற்றின் சுமையை தாங்கும் வகையில் கல்வி கோபுரத்தின் அடித்தளம் வலுப்படுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் கருத்தில் கொள்ள வேண்டும்.

  20 மாணவர்களுக்கு ஒருவர் வீதம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டாலும், அது சராசரியான அளவு தானே தவிர, சரியான அளவு இல்லை. 60 மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் 10 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும், அதே நேரத்தில் 100 பேர் பயிலும் பள்ளியில் இருவர் மட்டுமே ஆசிரியர்களாக இருப்பதும் பள்ளிக் கல்வித் துறையின் அவலங்களில் சிலவாகும்.

  தமிழகத்தில் உள்ள கிராமப்புற தொடக்கப் பள்ளிகளில் 48 சதவீத பள்ளிகள் இரு ஆசிரியர்களைக் கொண்ட பள்ளிகள் என்றும், தொலைதூரங்களில் உள்ள பள்ளிகளில் ஓர் ஆசிரியர் நிர்வாகப் பணிகளுக்காக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் மீதமுள்ள இன்னொரு ஆசிரியர் மட்டுமே மாணவர்களை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. மொத்தம் 5 வகுப்புகளுக்கான மாணவர்களை பெரும்பாலான நேரங்களில் ஓர் ஆசிரியர் மட்டுமே கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால், அவர்களால் எப்படி மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும்?

  தொடக்கக் கல்வியின் நிலை இவ்வாறு இருக்கும் சூழலில் இதை சரி செய்யாமல் மேல் நிலை வகுப்புகளில் சீர்திருத்தங்களை செய்வது குடத்தின் ஓட்டையை அடைக்காமல் தண்ணீர் பிடிக்கும் கதையாகவே அமையும்.

  இந்த நிலையை மாற்ற உடனடியாக அனைத்துத் தொடக்கப் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 5 வகுப்பறைகளும், 5 ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்தல், தொடக்கப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக சிறப்புத் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துதல், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் உள்ள அதிகாரியை பள்ளிகளின் தர இயக்குனராக நியமித்தல், பள்ளிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வசதியாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

  மேலும் அரசுப் பள்ளிகளில் மட்டுமின்றி தனியார் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்வியை உறுதி செய்தல், விளையாட்டு, நீதிபோதனை ஆகியவற்றுக்கு போதிய பாட வேளைகளை ஒதுக்குதல், வாக்காளர் பட்டியலை திருத்துவதில் தொடங்கி நலத்திட்ட உதவிகளுக்கான பயனாளிகள் பட்டியலை தயாரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை நிறுத்தி, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மட்டும் அவர்கள் கவனம் செலுத்துவதை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், செயலாளரும் மேற்கொள்ள வேண்டும்.

  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
  Next Story
  ×