search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலையில் பெண் விற்பனை பிரதிநிதி கொலை
    X

    திருவண்ணாமலையில் பெண் விற்பனை பிரதிநிதி கொலை

    திருவண்ணாமலையில் பெண் விற்பனை பிரதிநிதி கொலை செய்யப்பட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை புதுத்தெருவில் உள்ள 4-வது வீதியை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 42). இவரது கணவர் வேணுகோபால் 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு வரபிரசாத் (28), ரங்கபிரசாத் (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் வரபிரசாத் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் ரங்கபிரசாத் சென்னையில் என்ஜினீயராக உள்ளார்.

    இதனால் மஞ்சுளா ஒரு அடுக்குமாடி வீட்டின் தரைத்தளத்தில் தனியாக வசித்து வந்தார். அவர் பிரபல வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்புகளை சங்கிலி தொடர் முறையில் வாங்கி விற்கும் விற்பனை பிரதிநிதியாக இருந்தார்.

    இந்த நிலையில் வரபிரசாத் தனது தாயார் மஞ்சுளாவை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள 3 நாட்களாக முயன்றுள்ளார். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் சந்தேகமடைந்த வரபிரசாத் நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு பூட்டி கிடந்தது. இதையடுத்து அவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு ஒரு அறையில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து துணிமணிகள் அறை முழுவதும் சிதறி கிடந்தது. மேலும் அந்த அறை ரத்த வெள்ளமாக காட்சியளித்தது. மேலும் அந்த பீரோவுக்கு அடியில் கழுத்து மற்றும் உடலில் ரத்த காயங்களுடன் மஞ்சுளா தலைகுப்புற அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மற்றும் வரபிரசாத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மஞ்சுளா தங்கியிருந்த வீட்டில் மட்டும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அடுக்குமாடியில் உள்ள மற்ற வீடுகளில் மின்சாரம் இருந்தது.

    எனவே மஞ்சுளா வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் மின்சாரத்தை துண்டித்தபின் அவரை கொலை செய்து விட்டு கதவை பூட்டிவிட்டு தப்பியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×