search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: அரசின் கோரிக்கையை ஏற்று முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள்
    X

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: அரசின் கோரிக்கையை ஏற்று முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள்

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அரசின் கோரிக்கையை ஏற்று முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
    சென்னை:

    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, அரசின் கோரிக்கையை ஏற்று முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    போக்குவரத்து தொழிலாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுவதை தவிர்க்க முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே நிர்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை எழும்பூர்-நெல்லை இடையே முன்பதிவில்லாத ரெயில் பெட்டிகளை கொண்ட சிறப்பு ரெயில்(வண்டிஎண்:06067) இன்றும் (திங்கட்கிழமை), 19-ந்தேதியும் (வெள்ளிக்கிழமை) எழும்பூரில் இருந்து காலை 7.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்(06069) இந்த வாரம் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் எழும்பூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.35 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    நெல்லை-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரெயில்(06068) இன்று (திங்கட்கிழமை) முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் நெல்லையில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    கோவை-சென்னை சென்டிரல் சிறப்பு ரெயில்(06072) இந்த வாரம் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 4.15 மணிக்கு சென்டிரல் வந்தடையும்.

    சென்னை சென்டிரல்-கோவை சிறப்பு ரெயில்(06071) இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்டிரலில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவை சென்றடையும்.

    இவை அனைத்தும் முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்டவை.

    சென்னை எழும்பூர்-திருவாரூர் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06073) இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும். இந்த ரெயில் எழும்பூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு திருவாரூர் சென்றடையும்.

    திருவாரூர்-சென்னை எழும்பூர் இடையே சிறப்பு கட்டண ரெயில்(06074) இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும். ரெயில் திருவாரூரில் இருந்து மதியம் 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    சென்னை எழும்பூர்-திருவாரூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிவிட்டது.

    இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் 16,350 பயணிகள் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு தெற்கு ரெயில்வே செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×