search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வளசரவாக்கத்தில் தந்தை-மகன் கொலை
    X

    வளசரவாக்கத்தில் தந்தை-மகன் கொலை

    இரட்டை கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    பூந்தமல்லி:

    வளசரவாக்கம், கணபதி நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 55). திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளராக இருந்தார். டிராவல்ஸ் நிறுவனமும், வீடுகளுக்கு தண்ணீர் கேன் வினியோகம் செய்யும் தொழிலும் செய்து வந்தார்.

    இவரது மகன் சாந்தனு (25) அ.தி.மு.க. முன்னாள் வார்டு செயலாளராக இருந்தார். தந்தையும் மகனும் ஒரே வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    நேற்று மாலை ராஜ்குமாரும், சாந்தனுவும் வீட்டில் இருந்தனர். அப்போது அதே தெருவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டுக்கு தண்ணீர் கேன் போட வேண்டும் என்றார். இதையடுத்து அவரது வீட்டை பார்ப்பதற்காக சாந்தனு சென்றார்.

    அருகில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு அருகே சென்றபோது 3 பேர் கும்பல் அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி உஷாராணி, சாந்தனுவின் மனைவி செல்ல மாரீஸ்வரி அங்கு வந்தனர். அப்போது திடீரென மர்ம கும்பல் சாந்தனுவை அரிவாளால் வெட்டினர். அதிர்ச்சி அடைந்த சாந்தனுவும், ராஜ்குமாரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

    ஆனால் மர்ம கும்பல் அவர்கள் 2 பேரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த ராஜ்குமாரும் சாந்தனுவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இதனை கண்ட உஷாராணியும், செல்ல மாரீஸ்வரியும் அலறி துடித்தனர்.

    உடனே கொலை கும்பல் காரில் ஏறி தப்பி சென்று விட்டனர். பட்டப்பகலில் நடந்த இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க உதவி கமி‌ஷனர் கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில நிர்வாகி செந்தில்குமார் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து செந்தில்குமார் மற்றும் அவரது கார் டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கொலையுண்ட ராஜ்குமார், அதே பகுதியில் உள்ள கோவிலில் அனைத்து நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தி வந்தார். இது செந்தில்குமாருக்கு பிடிக்க வில்லை.

    இதேபோல் டிராவல்ஸ் நிறுவன வாகனங்கள் மற்றும் தண்ணீர் கேனுக்கு பயன் படுத்தும் டெம்போக்களை அதே பகுதியில் சாலை யோரத்தில் ராஜ்குமாரும், சாந்தனும் நிறுத்தி வந்தனர். இதனால் அவ்வழியே செந்தில்குமார் காரில் போகும்போது இடையூறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இந்த முன்விரோதத்தில் ராஜ்குமார், சாந்தனுவை செந்தில்குமார் தீர்த்துக் கட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    செந்தில்குமார் சினிமாவில் ஸ்டண்ட் துறையிலும் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை பிடிக்க காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர் பகுதியில் தனிப்படை போலீசார் விரைந்து உள்ளனர்.

    கொலையாளிகள் காரில் தப்பி செல்லும் காட்சி அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை வைத்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொலையுண்ட ராஜ்குமார், சாந்தனு உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

    இன்று பிற்பகல் அவர்களது இறுதிச்சடங்கு நடக் கிறது. இரட்டை கொலையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×